கடந்த 9 மாதங்களில் சமையல் எண்ணெய் இறக்குமதி 25.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக சமையல் எண்ணெய் வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
விலை உயர்வு
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:-
மத்திய அரசு சமையல் எண்ணெய் விலைகளின் உயர்வை கட்டுப்படுத்த இறக்குமதிக்கான தளர்வுகளை அறிவித்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் ஜூலை மாதம் வரை 9 மாதங்களில் சமையல் எண்ணெய் இறக்குமதி 25.04 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் முதல் ஜூலை மாதம் வரை 121.2 லட்சம் டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 96.98 லட்சம் டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. சமையல் எண்ணெய் இறக்குமதியில் பாமாயிலின் பங்கு 50 சதவீதத்தில் இருந்து 59 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பாமாயில் இறக்குமதி
சோயாபீன் எண்ணை இறக்குமதியும் கடந்த 4 மாதங்களில் அதிகரித்துள்ளது. கடந்த 9 மாதங்களில் சோயாபீன் எண்ணெய் 28.74 லட்சம் டன்னும், சூரியகாந்தி எண்ணெய் 21.8 லட்சம் டன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் 4.6 லட்சம் டன் கச்சா பாமாயில் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் ஜூலை மாதம் 8.41 லட்சம் டன் இறக்குமதி செய்யப்பட்டது. இது 80.4 சதவீதம் அதிகமாகும். இதேபோன்று சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் கடந்த ஜூன் மாதம் 2.37 லட்சம் டன் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் ஜூலை மாதம் 2.47 லட்சம் டன் இறக்குமதி செய்யப்பட்டது. மொத்தத்தில் ஜூன் மாதம் 6.8 லட்சம் டன் பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டு இருந்த நிலையில் ஜூலை மாதம் 10.8 லட்சம் டன் பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டு இருந்தது.
உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு
தற்போதைய நிலையில் 45 நாட்களுக்கு தேவையான சமையல் எண்ணெய் மத்திய அரசிடம் கையிருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து பருவமழை பெய்துள்ள நிலையில் எண்ணெய் வித்துக்கள் சாகுபடி அதிகரிக்கும் நிலையில் உள்நாட்டு சமையல் எண்ணெய் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் இறக்குமதி சமையல் எண்ணெய் குறைவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
இவ்வாறு வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.