25 சதவீத இடஒதுக்கீடு
தமிழகம் முழுவதும் கட்டாய உரிமை சட்டத்தின்படி ஆண்டு தோறும் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். அதன்படி, இந்த ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் பெறப்பட்டன. குறிப்பிட்ட பள்ளிகளில் சேர அதிகளவு மாணவர்கள் விண்ணப்பித்திருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு நடைபெற்றது.
குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு
அதன்படி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட 11 தனியார் சுயநிதி பள்ளிகளில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலெட்சுமி வழிகாட்டுதலின்படி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேகளீசன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் கண்ணதாசன், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள், பெற்றோர்கள் முன்னிலையில் 217 மாணவர்களின் பெயர்கள் துண்டு சீட்டில் எழுதி ஒரு பெட்டிக்குள் போடப்பட்டிருந்தது. துண்டு சீட்டை ஒன்றன் பின் ஒன்றாக மாணவ-மாணவிகள் எடுத்தனர். அதில், எழுதியிருந்த பெயர்களின் அடிப்படையில் 83 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு 8-ம் வகுப்பு வரை கல்வி கட்டணத்தை அரசு செலுத்தும். தனியார் பள்ளிகள் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்ந்துள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் விவரம் அந்தந்த பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டதாகவும், உடனடியாக மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.