தமிழக செய்திகள்

கொடைக்கானலில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் போதை விருந்து 260 பேர் சுற்றி வளைப்பு; 3 பேர் கைது

கொடைக்கானலில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் போதை விருந்து நடந்தது. இதில் 260 பேரை போலீசார் சுற்றி வளைத்தனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

கொடைக்கானல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரின் அருகே கூக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குண்டுப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் போதை விருந்து நடைபெறுவதாக மதுரை சிறப்பு போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைதொடர்ந்து தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் உத்தரவின்பேரில், போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன் உள்பட 3 போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 100 போலீசார் நள்ளிரவு குண்டுப்பட்டி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அங்கு இரவுநேர விருந்தில் பங்கேற்ற 260 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்கள் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருந்தனர். அதில் கல்லூரி மாணவர்கள், ஐ.டி.நிறுவன ஊழியர்கள் இருப்பது தெரியவந்தது. அவர்களிடம் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் அந்த தோட்டத்தில் இருந்த போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விருந்தில் பங்கேற்ற 260 பேரையும் இதுபோன்ற விருந்தில் இனிமேல் பங்கேற்க கூடாது என்று போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பினர். அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்றனர்.

விருந்து நடந்த தோட்டத்தின் உரிமையாளரான குண்டுபட்டியை சேர்ந்த கற்பகமணி (வயது 45) மற்றும் விருந்திற்கு ஏற்பாடு செய்த ஒருங்கிணைப்பாளர்களான திண்டுக்கல் கே.கே.நகரை சேர்ந்த ஹரிஸ்குமார் (35), ராஜாக்காபட்டியை சேர்ந்த தருண்குமார் (23) ஆகியோரை போலீசார் பிடித்தனர். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் விருந்து நடத்தியதில் வேறு யாருக்கும் தொடர்பு உண்டா?, விருந்தில் பங்கேற்க கட்டணம் எவ்வளவு பெறப்பட்டது? இதற்கான தகவல் எப்படி பகிர்ந்து கொள்ளப்பட்டது, போதைப்பொருட்களை எங்கு வாங்கினர் என்பது குறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொடைக்கானல் அருகே பூம்பாறையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் இதுபோல் போதை விருந்து நடந்தது. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பியதும், தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் போதை விருந்து நடைபெற்ற சம்பவம் கொடைக்கானலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு