சென்னை,
தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9-ந்தேதிகளில் நடந்தது.
அதிக இடங்களில் தி.மு.க. வெற்றி
153 மாவட்ட கவுன்சிலர்கள், 1,420 பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர்கள், 3 ஆயிரத்து 2 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், 23 ஆயிரத்து 185 கிராம பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர்கள் என மொத்தம் 27 ஆயிரத்து 760 பதவி இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் அனைத்தும் கடந்த 12-ந்தேதி எண்ணப்பட்டன.
பல இடங்களில் நள்ளிரவு வரையும், சில இடங்களில் மறுநாள் வரையும் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் அதிக இடங்களில் ஆளும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. அனைத்து மாவட்ட கவுன்சிலையும், பஞ்சாயத்து யூனியன்களையும் தி.மு.க. கூட்டணி அள்ளியது.
மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி
அதன்படி தி.மு.க. 139 மாவட்ட கவுன்சிலர்கள், 982 பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர்கள் பதவியிடங்களை கைப்பற்றியது. பஞ்சாயத்து தலைவர் தேர்தலிலும் பெரும்பான்மையான இடங்களில் தி.மு.க. வெற்றி வாகை சூடியது.
மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களில் காங்கிரஸ் 9, அ.தி.மு.க. 2, இதர கட்சிகள் 3 இடங்களிலும் வென்றது. பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர் பதவிகளில் அ.தி.மு.க. 212, பா.ம.க. 46, காங்கிரஸ் 33, பா.ஜ.க. 8, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 4, இந்திய கம்யூனிஸ்டு 3, தே.மு.தி.க. ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. அங்கீகரிக்கப்படாத கட்சிகள், சுயேச்சையாக களம் இறங்கியவர்களும் 131 இடங்களில் வாகை சூடினர்.
90 வயது பெண் பஞ்சாயத்து தலைவர்
கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தலில் கட்சி சின்னம் கிடையாது என்றாலும், மக்கள் சிறப்பான வேட்பாளர்களை தேர்வு செய்தனர். குறிப்பாக படித்தவர்களையும், இளம்வயது வேட்பாளர்களையும் வாகை சூட வைத்துள்ளனர்.
குறிப்பாக சென்னையை ஒட்டியுள்ள பரங்கிமலை யூனியன் முடிச்சூர் பஞ்சாயத்து தலைவராக 23 வயது பெண் என்ஜினீயர் சிந்துலேகா, தென்காசி மாவட்டம் கடையம் யூனியனில் உள்ள வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து தலைவராக 22 வயது என்ஜினீயரிங் கல்லூரி மாணவி சாருகலா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதேபோல் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பஞ்சாயத்து யூனியனில் உள்ள சிவந்திப்பட்டி பஞ்சாயத்து தலைவராக 90 வயது பெருமாத்தாள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாளை மறைமுகத்தேர்தல்
இந்தநிலையில் 9 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், 74 பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள், துணைத்தலைவர்கள், 3 ஆயிரத்து 2 கிராம பஞ்சாயத்து துணை தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத்தேர்தல் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற இருக்கிறது. இப்பதவிகளுக்கு இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் போட்டியிடவும், வாக்களிக்கவும் தகுதி உடையவர்கள் ஆவார்கள்.
எனவே ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அனைவரும் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் 20-ந்தேதி (நேற்று) காலை 10 மணி முதல் பதவியேற்றுக்கொள்ளலாம் என்றும், பதவி பிரமாணம் எடுத்துக்கொள்பவர்கள் மட்டுமே மறைமுகத்தேர்தலில் போட்டியிடவும், வாக்களிக்கவும் முடியும் என்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது.
பதவி ஏற்பு
அதன்படி உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் உற்சாகமாக நேற்று பதவியேற்றுக்கொண்டனர். இதனால் ஊராட்சி அலுவலகங்கள் நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தன.
இதனையடுத்து மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் அனைவரும் அந்தந்த மாவட்ட ஊராட்சி அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர். இதேபோல் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர்கள் அனைவரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் (பி.டி.ஓ. அலுவலகம்) பதவி பிரமாணம் செய்து கொண்டனர்.
பஞ்சாயத்து அலுவலகங்களில் நடந்த விழாக்களில் பஞ்சாயத்து தலைவர்களும், வார்டு கவுன்சிலர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். பெரும்பாலான ஊர்களில் விழாவையொட்டி மேளதாளம் முழங்க, வாணவேடிக்கை நடந்தது.
காஞ்சீபுரம், செங்கல்பட்டு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 11 மாவட்ட கவுன்சிலர்கள், 98 யூனியன் கவுன்சிலர்கள், 273 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், 1,938 வார்டு கவுன்சிலர்கள் உள்பட 2,320 பேர் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர்.
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 16 மாவட்ட கவுன்சிலர்கள், 154 யூனியன் கவுன்சிலர்கள், 359 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 2 ஆயிரத்து 679 வார்டு கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். அந்தந்த தேர்தல் அதிகாரிகள் பதவி பிரமாணம் செய்து கொண்டனர்.
பரங்கிமலை ஒன்றியம் முடிச்சூர் பஞ்சாயத்து தலைவராக பெண் என்ஜினீயர் சிந்துலேகாவும் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு அப்போது அவர், முதன்மை ஊராட்சியாக முடிச்சூரை மாற்ற முயற்சிப்பதாக உறுதி கூறினார்.
தண்ணீர் பிரச்சினையை போக்குவேன்
தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் வெங்கடாம்பட்டி கிராம பஞ்சாயத்து தலைவராக என்ஜினீயரிங் மாணவி சாருகலா நேற்று பதவியேற்றுக்கொண்டார். அப்போது அவர் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுப்பேன். கருவேல மரங்களை அகற்றிவிட்டு நாட்டு மரங்களை நடுவதற்கு முயற்சி செய்வேன் என்று கூறினார்.
இதேபோல் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை யூனியன் சிவந்திபட்டி பஞ்சாயத்து தலைவராக 90 வயது மூதாட்டி பெருமாத்தாளும், பாளையங்கோட்டை யூனியன் மேலபுத்தநேரி பஞ்சாயத்து தலைவராக இளம் பட்டதாரியான மனோஜ்குமார் (22) என்பவரும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
9 மாவட்டங்களில் நேற்று மட்டும் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதவி ஏற்றுக்கொண்டனர்.
தி.மு.க. கோஷ்டி மோதல்
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பஞ்சாயத்து யூனியன் தலைவர் பதவியை பிடிக்க பதவி ஏற்க வந்த கவுன்சிலர்களை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்த முயன்றதால் தி.மு.க.வினரிடையே மோதல் ஏற்பட்டது.
போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதேபோல் பல இடங்களில் மோதல் நடந்துள்ளதை காண முடிந்தது.
காலஅவகாசம்
இதற்கிடையே நேற்று பதவி ஏற்காதவர்களுக்கு காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல், 28 மாவட்டங்களில் நடைபெற்ற தற்செயல் தேர்தல்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 20-ந்தேதி (நேற்று) பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளாத நிலையில், அவர்கள் 22-ந்தேதி (நாளை) மறைமுக தேர்தல் நடவடிக்கைக்கு முன்பாக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டு மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணைத் தலைவர், கிராம ஊராட்சி துணை தலைவர் தேர்தலில் பங்கு பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அவ்வாறும் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ளாதவர்கள் 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு (40) 2-ல் வரையறுக்கப்பட்டுள்ளவாறு, அவரது பதவிக்காலம் தொடங்குகிற நாளான 20.10.2021-ல் (இன்று) இருந்து 3 மாதங்களுக்கு உள்ளாகவோ அல்லது 20.10.2021-க்கு பின்னர் நடைபெறும் முதல் 3 கூட்டங்களில் ஒன்றிலோ பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.