தமிழக செய்திகள்

2-ம் ஆண்டு நினைவு தினம்: ஜெயலலிதா சமாதியில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி

ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, அவரது சமாதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

தினத்தந்தி

சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 2-வது ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஜெயலலிதாவின் நினைவை போற்றும் வகையில் வழிநெடுகிலும் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அ.தி.மு.க.வின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து அமைதி பேரணி தொடங்கினர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பெரும்பாலான அமைச்சர்கள் கருப்புச்சட்டையுடன் பேரணியில் பங்கேற்றனர். காலை 10.35 மணிக்கு தொடங்கிய பேரணி வாலாஜா சாலை, காமராஜர் சாலை வழியாக 11.10 மணியளவில் ஜெயலலிதா நினைவிடத்தை சென்றடைந்தது.

முதல்-அமைச்சர் உருக்கம்

ஜெயலலிதா சமாதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் சமாதியை மண்டியிட்டு உருக்கத்துடன் வணங்கினார். அப்போது அவர் மிகவும் சோகமாக காணப்பட்டார். அவருடைய கண்கள் கலங்கின.

பின்னர் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, டி.ஜெயக்குமார் உள்பட அமைச்சர்களும், நிர்வாகிகளும் உருக்கமாக அஞ்சலி செலுத்தினர்.

திரைப்பட இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், நாஞ்சில் பி.சி.அன்பழகன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

2 நிமிடம் மவுன அஞ்சலி

ஜெயலலிதா நினைவுநாளையொட்டி அ.தி.மு.க. சார்பில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி, அவரது நினைவிடத்துக்கு வெளியே நடைபெற்றது. இதற் காக அங்கு தனி மேடை அமைக்கப்பட்டிருந்தது. இந்த மேடையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை யில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழி வாசகங்களை வாசித்தார்.

அப்போது மேடையின் கீழே நின்று கொண்டிருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் அந்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் ஜெயலலிதாவுக்கு அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என்று அ.தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன் கேட்டுக்கொண்டார். அதன்படி அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

தேர்தலில் வெற்றி பெற...

உறுதிமொழி வாசகங்கள் சில வருமாறு:-

* ஜெயலலிதாவின் மகத்தான பெருமைகளை மக்களுக்கு எடுத்துக் கூறி, அ.தி.மு.க.வை மென்மேலும் வலுப்படுத்த, உழைப்போம்.

* தமிழக மக்களுக்கு எல்லா நேரங்களிலும் பாதுகாவலராய் செயல்படும் வண்ணம் பொது வாழ்வு கடமைகளை நிறைவேற்றுவோம்.

* அ.தி.மு.க. அரசின் பணிகளுக்கு உறுதுணையாய் நிற்கவும், அரசின் திட்டங்கள் மக்களை சென்றடையவும் அயராது உழைப்போம்.

* ஜெயலலிதா காட்டிய வழியில் பணியாற்றி, சட்டமன்ற இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று, அதனை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்கிட அயராது உழைப்போம்.

* ஒற்றுமையாய் பாடுபட்டு அ.தி.மு.க.வை கட்டி காப்போம் என்று உளமார உறுதி ஏற்கிறோம்.

மேற்கண்டவாறு வாசகங்கள் இடம் பெற்றன.

சபாநாயகர்-சைதை துரைசாமி

தமிழக சட்டமன்ற சபாநாயகர் ப.தனபால், தனது மனைவி கலைச்செல்வி, மகன் லோகேஷ், சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோருடன் வந்து ஜெயலலிதா சமாதியில் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், மனிதநேய மையத்தின் தலைவருமான சைதை துரைசாமி அதிகாலை ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

சசிகலாவின் சகோதரரும், அண்ணா திராவிடர் கழகத்தின் தலைவருமான திவாகரன், அவரது மகன் ஜெயாநந்தன், ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்.ஜி.ஆர். அம்மா, தீபா பேரவை பொதுச்செயலாளருமான ஜெ.தீபா, அவரது கணவன் மாதவன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

அ.தி.மு.க.வினர் அமைதி பேரணியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வழி நடத்தி சென்றதால், போலீசார் பேரணியை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் அரண் போன்று ஈடுபட்டிருந்தனர்.

டி.டி.வி.தினகரன் அணியினரும் தனியாக அமைதி பேரணி நடத்தியதால் போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஜெயலலிதாவின் நினைவிடத்தின் உள்ளே தடுப்புவேலிகள் அமைத்து அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் உள்ள தன்னுடைய இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்