தமிழக செய்திகள்

சரக்குவேன் மோதி தம்பதி உள்பட 3 பேர் பலி

ஒட்டன்சத்திரம் அருகே, சரக்குவேன் மோதி தம்பதி உள்பட 3 பேர் பலியாகினர்.

தினத்தந்தி

சரக்கு வேன் மோதல்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஏ.பி.பி.நகரை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 70). ஓய்வுபெற்ற தபால் ஊழியர். அவருடைய மனைவி சந்திரகலா (65). ஓய்வுபெற்ற அரசுப்பள்ளி ஆசிரியை.

நேற்று இவர்கள், தங்கச்சியம்மாபட்டி அருகே உள்ள கருமாரியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக மொபட்டில் சென்றனர். சந்திரசேகர் மொபட்டை ஓட்டினார். சந்திரகலா பின்னால் அமர்ந்து இருந்தார்.

ஒட்டன்சத்திரம்-தாராபுரம் நான்கு வழிச்சாலையில், தங்கச்சியம்மாபட்டி பகுதியில் மொபட் சென்று கொண்டிருந்தது. அப்போது நிலக்கோட்டையில் இருந்து பூக்கள் ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி சென்ற சரக்குவேன், எதிர்பாராதவிதமாக மொபட் மீது பயங்கரமாக மோதியது.

தம்பதி உள்பட 3 பேர் பலி

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில், மொபட்டில் இருந்து தம்பதி தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த சந்திரசேகர், சந்திரகலா ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர்.

இதற்கிடையே விபத்துக்குள்ளான சரக்கு வேன் சாலையில் தறிகெட்டு ஓடியது. ஒரு கட்டத்தில், சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி சரக்கு வேன் கவிழ்ந்தது. அப்போது சரக்குவேனின் ஒரு டயர் வெடித்ததுடன், அது கழன்று எதிரே உள்ள சாலையில் ஓடியது.

அந்தநேரத்தில், எதிரே உள்ள சாலையில் ஒத்தையூரை சேர்ந்த கருப்புசாமி (50) என்பவர், கள்ளிமந்தையத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

சரக்கு வேனில் இருந்து கழன்று ஓடிய டயர், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கருப்புசாமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சாலையில் சிதறிய பூ மூட்டைகள்

இதற்கிடையே 3 பேரை பலிகொண்ட சரக்குவேனை ஓட்டி வந்த நிலக்கோட்டையை சேர்ந்த சதீஷ்குமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். சரக்குவேன் கவிழ்ந்ததால், அதில் இருந்த பூ மூட்டைகள் சாலையில் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

விபத்து காரணமாக, ஒட்டன்சத்திரம்-தாராபுரம் நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அம்பிளிக்கை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் பலியான 3 பேரின் உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் போக்குவரத்தை சீரமைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒட்டன்சத்திரம் அருகே, சரக்குவேன் மோதி தம்பதி உள்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு