சென்னை,
தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் தொழிலாளர்களின் உழைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இவர்களின் உழைப்பால்தான் நாடு சிறப்பான பொருளாதார வளர்ச்சியை அடைந்து வருகிறது. பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் வகையில், இந்த ஆண்டு தீபாவளித் திருநாளை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு 2018-19-ம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும்.
திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ன்படி, போனஸ் பெற தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21 ஆயிரம் என உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி போனஸ் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பும் ரூ.7 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 2018-19-ம் ஆண்டுக் கான போனஸ் மற்றும் கருணைத்தொகை கீழ்க் கண்டவாறு வழங்கப்படும்.
* லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்த நிறுவனங்களின் ஒதுக் கக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 சதவீத போனஸ் மற்றும் 11.67 சதவீத கருணைத்தொகை என மொத்தம் 20 சதவீதம் வரை போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும்.
* நஷ்டம் அடைந்துள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 10 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும்.
* தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், அரசுப் போக்குவரத்து கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 20 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும்.
* லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத்தொகையுடன் மொத்தம் 20 சதவீதம் வரையிலும் ஒதுக்கக் கூடிய உபரி தொகைக்கு ஏற்ப வழங்கப்படும். பிற கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தகுதியுடைய பணியாளர்களுக்கும் 8.33 சதவீதம் குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகையும் வழங்கப்படும்.
* அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு வனத்தோட்ட கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு, அந்த நிறுவனங்களின் ஒதுக்கக்கூடிய உபரித் தொகையை கருத்தில் கொண்டு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத்தொகையோ அல்லது 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகையோ வழங்கப்படும்.
* தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 20 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப் படும்.