தமிழக செய்திகள்

கள்ளக்குறிச்சி: கத்தியைக் காட்டி பணம் மற்றும் செல்போன் பறிப்பு - 3 வாலிபர்கள் கைது...!

திருக்கோவிலூர் அருகே கத்தியைக் காட்டி பணம் மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட பெங்களூரைச் சேர்ந்த 2 பேர் உட்பட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள கீழையூர் வள்ளுவர் தெருவைச் சேர்ந்த தமிழரசன் மகன் வெங்கடேசன் (வயது 32). இவர் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் திருக்கோவிலூர் அருகே சடகட்டி கிராமத்தில் உள்ள பஸ் ஸ்டாண்ட் அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் திடீரென வெங்கடேசன் முன்பு வண்டியை நிறுத்திவிட்டு கத்தியைக் காட்டி அவரிடமிருந்த ரூபாய் ஆயிரம் பணம் மற்றும் செல்போனையும் திருடிச் சென்று விட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு மணலூர்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் விரைந்து சென்று வழிப்பறி சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் பெங்களூர் ஜெய் நகரைச் சேர்ந்த முத்து என்பவரின் மகன்கள் சுனில் குமார் (21), சுரேஷ் (19) மற்றும் திருக்கோவிலூர் போலீஸ் சரகம் கச்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த தண்டபாணி மகன் அரவிந்த் (20) என தெரியவந்தது. அதன்பேரில் விரைந்து சென்ற போலீசார் இருசக்கர வாகனத்தில் தப்பிய மேற்கண்ட 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடமிருந்து பைக், செல்போன் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து மணலூர்பேட்டை போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது