தேர்தல் 2026

தமிழகத்தில் 300 சதவீதம் வன்கொடுமைகள் அதிகரிப்பு: விளாத்திகுளத்தில் குஷ்பூ பேச்சு

முதல்வர் ஸ்டாலின் அவர்களை 'அப்பா' என்கிறார்கள், ஆனால் அவர் ஆட்சியில் எல்லாம் 'தப்பாக' தான் நடக்கிறது என்று குஷ்பூ சுந்தர் பேசினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சத்யாவை ஆதரித்து, பா.ஜ.க. மாநில துணை தலைவரும் நடிகையுமான குஷ்பூ சுந்தர் வாக்குச் சேகரித்தார். விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்தப் பிரசாரக் கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி நிர்வாகிகளுடன் இணைந்து அவர் 'இரட்டை இலை' சின்னத்திற்கு வாக்குக் கேட்டார். அப்போது அவர் பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடியும், தமிழகத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் எடப்பாடி பழனிசாமியும் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளனர். ஆனால் தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் 300 சதவீதம் அதிகரித்துள்ளன.

12-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது வேதனைக்குரியது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை 'அப்பா' என்கிறார்கள், ஆனால் அவர் ஆட்சியில் எல்லாம் 'தப்பாக' தான் நடக்கிறது.

இன்றைய தமிழகத்தில் போதை கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது. பள்ளிக் குழந்தைகள் கையில் விதவிதமான வண்ணங்களில் போதை மிட்டாய்கள் புழங்குவதாக அரசுப் பள்ளி ஆசிரியர்களே கவலை தெரிவிக்கின்றனர். கல்லூரிகளின் வாசல்களிலேயே போதைப்பொருட்கள் தாராளமாகக் கிடைக்கின்றன. தமிழகத்தின் கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் தி.மு.க. அரசு செயல்படுகிறது.

பெண்களுக்கு இலவச பேருந்து வசதி என்று கூறிவிட்டு, அவர்களை 'ஓசியில் போகிறவர்கள்' என்று இழிவுபடுத்தி பேசுவதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கலாசாரம். பெண்களை அசிங்கப்படுத்துவதையும், இழிவுபடுத்துவதையும் தான் தி.மு.க. செய்து வருகிறது. எனவே, தொகுதி மேம்பாட்டிற்கும் பெண்களின் பாதுகாப்பிற்கும் அ.தி.மு.க. வேட்பாளர் சத்யாவிற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், பால்ராஜ், நகரச் செயலாளர் மாரிமுத்து, பாஜக மாவட்டச் செயலாளர் சரவணன்கிருஷ்ணன், கந்தசாமி, அம்மா பேரவை வரதராஜபெருமாள், அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.