சென்னை,
சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) சட்டத்தில், ஒவ்வொரு வணிக நிறுவனத்திற்கு ஏற்ப கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். சில நிறுவனங்கள் மாதந்தோறும், 3 மாதத்திற்கு ஒரு முறை என பல வகைகளில், கணக்கு தாக்கல் செய்வது அவசியம் ஆகும்.
மளிகை கடை போன்ற வரி சலுகை பெற முடியாத, நிலையான வருவாய்க்கு ஏற்ப, மாதந்தோறும் வரி செலுத்தும் நிறுவனங்கள் தொகுப்பு திட்டத்தின் கீழ் வருவர். இவர்கள் உற்பத்தி நிறுவனங்கள் போல உள்ளீட்டு வரி சலுகை போன்றவை பெற முடியாது. மேலும் ரூ.1 கோடிக்கு கீழ் வருவாய் ஈட்டக்கூடிய சில வணிக நிறுவனங்களும், இந்த திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம். இவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை, ஜி.எஸ்.டி. ஆர்-4 படிவம் தாக்கல் செய்வது கட்டாயம்.
கொரோனா தொற்று காரணமாக, ஜி.எஸ்.டி. ஆர்-4 படிவம் தாக்கல் செய்ய வருகிற 31-ந்தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அதற்குள், ஜி.எஸ்.டி. ஆர்-4 படிவத்தை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர். இல்லை எனில், தாமத கட்டணத்துடன் தாக்கல் செய்ய வேண்டும்.
மேற்கண்ட தகவலை ஜி.எஸ்.டி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.