தமிழக செய்திகள்

364 ஆலிவர் ரட்லி ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன

கோடியக்கரையில் 364 ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.

வேதாரண்யம்:

கோடியக்கரையில் 364 ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.

ஆலிவர் ரெட்லி ஆமைகள்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கடற்கரையில் அழிவின் விளிம்பில் உள்ள அரியவகை இனமான ஆலிவர் ரட்லி ஆமைகளை பாதுகாக்க ஆமைகள் முட்டை பொரிப்பகம் கோடியக்கரை வனத்துறை மூலம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

கடந்த 1987-ம் ஆண்டு முதல் கோடியக்கரை கடற்கரையில் ஆலிவர் ரெட்லி ஆமை முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து பொரிப்பகத்தில் பாதுகாத்து குஞ்சு பொரித்தவுடன் கடலில் விடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

14 ஆயிரத்து 322 முட்டைகள்

கோடியக்கரை கடற்கரையோரத்தில் ஆண்டு தோறும் டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை நடுக்கடலில் இருந்து ஆலிவர் ரட்லி ஆமைகள் கோடியக்கரை கடற்கரை பகுதிக்கு வந்து குழி தோண்டி முட்டையிட்டு மீண்டும் கடலுக்கு செல்வது வழக்கம்.

அதே போல் இந்த ஆண்டும் ஆலிவர் ரெட்லி ஆமைகள் கோடியக்கரை கடற்கரை பகுதிக்கு வந்து முட்டையிட்டு சென்றது. கோடியக்கரை மற்றும் ஆறுகாட்டுத்துறையில் 132 ஆலிவர் ரெட்லி ஆமைகள் 14 ஆயிரத்து 322 முட்டைகள் இட்டது.

கடலில் விடப்பட்டன

இந்த முட்டைகளை நாய், நரி, சமூக விரோதிகளிடம் இருந்து பாதுகாக்க வனத்துறையினர் முட்டைகளை எடுத்து சென்று பொரிப்பகத்தில் வைத்துபாதுகாத்து வந்தனர். முட்டைகளில் இருந்து ஆமை குஞ்சுகள் வெளிவந்தது.

இதை தொடர்ந்து இந்த ஆண்டு மூன்றாவது முறையாக நேற்று முன்தினம் 364 ஆலிவர் ரட்லி ஆமை குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திருச்சி மண்டல வன பாதுகாவலர் சதீஷ், நாகை வன உயிரின பாதுகாவலர் யோகேஸ்குமார் மீனா, வனச்சரகர் அயூப்கான் மற்றும் வனத்துறையினர் கோடியக்கரை கடலில் ஆமை குஞ்சுகளை விட்டனர்.

40 ஆண்டுகளில்...

இதுகுறித்து கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் கூறுகையில், இந்த ஆண்டு ஆலிவர் ரெட்லி ஆமைகள் கடற்கரையில் இட்டு சென்ற முட்டைகளை சேகரித்து பாதுகாப்பாக பொரிப்பகத்தில் வைக்கப்பட்டது.இந்த மூட்டைகளில் இருந்து ஆமை குஞ்சுகள் வெளியே வந்தன. இதை தொடர்ந்து இந்த ஆண்டில் 3-வது முறையாக ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. இந்த ஆண்டில் ஏற்னவே இரண்டு முறை ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன. கடந்த 40 ஆண்டுகளில் வனத்துறை மூலம் 10 லட்சம் ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளது என்றார்.