கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் விதிமீறியதாக ஓ.பன்னீர்செல்வம் மீது பதிவான 4 வழக்குகள் ரத்து - ஐகோர்ட்டு உத்தரவு

நாடாளுமன்ற தேர்தலில் விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்ததாக ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் கடந்த 2024-ம் ஆண்டு நடந்தபோது, ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டார். அப்போது, தேர்தல் விதிமுறைகளை மீறி அதிக எண்ணிக்கை கொண்ட வாகனங்களில் சென்று பிரசாரம் செய்தார்; இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடித்து பிரசாரம் செய்தார் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் மீது பரமக்குடி, திருவாடானை, திருப்புல்லாணி, கீழக்கரை ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை எல்லாம் ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில், ஓ.பன்னீர்செல்வம் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "தேர்தல் விதிகளின் அடிப்படையில் தகுதியான அதிகாரிகள் புகார் செய்யவில்லை. போலீஸ் அதிகாரிகளே புகார் செய்து, போலீஸ் அதிகாரிகளே வழக்கும் பதிவு செய்துள்ளனர். அதுமட்டுமல்ல, ஓராண்டுக்கும் மேலாக காலதாமதமாக இந்த வழக்குகளில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

எனவே, இந்த வழக்குகளையும், குற்றப் பத்திரிகைகளையும் ரத்து செய்யவேண்டும்" என்று வாதிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது பதிவு செய்யப்பட்ட 4 தேர்தல் வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

Also read:யுபிஎஸ்சி தேர்வில் 2-ம் இடம் பிடித்த தமிழக மாணவி - டிடிவி தினகரன் வாழ்த்து