வெவ்வேறு சம்பவங்களில் விவசாயி உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
விவசாயி
தா.பேட்டை அருகே சக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 37). விவசாயியான இவர் மது பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார். இந்த நிலையில் மது குடிக்க சக்திவேல் தனது மனைவி சுகன்யாவிடம் பணம் கேட்டுள்ளார்.
இதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த சக்திவேல் விஷம் குடித்து மயங்கினார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தா.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயங்கி விழுந்தவர் சாவு
* திருச்சி பிராட்டியூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (48).இவர் உறவினர் வீட்டு திருமணத்திற்காக வீரப்பூர் சென்றார். பின்னர் அங்கிருந்து பஸ் மூலம் திருச்சி மத்திய பஸ் நிலையம் வந்தார். அங்கு, அவர் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவலாளி
* ஸ்ரீரங்கம் திருவளர்ச்சோலை பனையபுரம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் சபரிநாதன் (53). இவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் சம்பவத்தன்று பணியில் இருக்கும் மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதியவர்
* திருச்சி மத்திய பஸ் நிலையம் புதுக்கோட்டை பஸ் நிறுத்தத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து இறந்தார். கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் ? என விசாரணை நடத்தி வருகின்றனர்.