வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான கடைக்கு வாடகை பாக்கி வைத்துள்ளவர்களுக்கு கமிஷனர் ரத்தினசாமி உத்தரவின்பேரில் நோட்டீஸ் மற்றும் அந்த கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட வேலூர்-ஆற்காடு சாலையில் உள்ள கோடையிடி குப்புசாமி பள்ளி வளாகத்தையொட்டி உள்ள 15-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு கடந்த 6 மாதங்களாக வாடகை செலுத்தவில்லை. இதையடுத்து அந்த கடைகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பலர் வாடகை பாக்கியை செலுத்தினார்கள். ஆனாலும் சிலர் வாடகை பாக்கி வைத்திருந்தனர்.
இந்த நிலையில் 2-வது மண்டல உதவிகமிஷனர் சுதா தலைமையில் உதவி வருவாய் அலுவலர் குமரவேலு, வருவாய் ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் வருவாய் உதவியாளர்கள் சென்று வாடகை செலுத்தாத 4 கடைகளுக்கு 'சீல்' வைத்தனர். அதைத்தொடர்ந்து பல்வேறு இடங்களில் வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரேநாளில் ரூ.12 லட்சம் சொத்துவரியும், குடிநீர் வரி ரூ.6 லட்சமும், கடைவாடகை பாக்கி ரூ.4 லட்சமும், தொழில்வரி ரூ.1 லட்சமும் வசூலானது. வரிபாக்கி வைத்திருக்கும் நபர்கள் அதற்கான தொகையை 27-ந் தேதிக்கு பின்னர் வங்கி காசோலையாக செலுத்த வேண்டாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.