தமிழக செய்திகள்

தமிழகத்தில் 43.3 சதவீதம் குழந்தைகள் ரத்த சோகையால் பாதிப்பு

தமிழகத்தில் 15-49 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 52.8 சதவீதம் பேருக்கு ரத்த சோகை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 43.3 சதவீதம் குழந்தைகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருப்பது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

'சம்பதா' என்ற நுண் ஊட்டச்சத்து ஆய்வு

ஐ.சி.எம்.ஆர். எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம், 'சம்பதா' என்ற நுண் ஊட்டச்சத்து ஆய்வை மேற்கொண்டது. இதற்காக நாடு முழுவதும் 35 மாநிலங்களில் உள்ள 183 மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

பெண்களில் 52.8 சதவீதம் பேருக்கு ரத்த சோகை

இவை பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதிலிருந்து, தமிழகத்தில் 15-49 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 52.8 சதவீதம் பேருக்கு ரத்த சோகை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தேசிய அளவில் 55.9 சதவீதமாக உள்ளது.

வளரிளம் பருவத்தினர் 22.2 சதவீதம் பேருக்கு ரத்த சோகை

பள்ளி சிறார்கள் மற்றும் வளரிளம் பருவத்தினரை பொருத்தவரை, தேசிய சராசரியைவிட தமிழகம் மேம்பட்டு உள்ளது. அதன்படி 5-9 வயது வரையிலான சிறார்களில் 22.2 சதவீதம் பேருக்கு மட்டுமே பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வளரிளம் பருவத்தினர் இடையே ரத்த சோகை வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 43.3 சதவீதம் பேருக்கு ரத்த சோகை

தமிழகத்தில் 1-5 வயது வரையிலான குழந்தைகளிடையே 43.3 சதவீதம் பேருக்கு ரத்த சோகை பதிவாகி உள்ளது. இது தேசிய சராசரியை விட 2 சதவீதம் அதிகம். இவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, ஊட்டச்சத்து சிகிச்சையை முறையாக எடுத்துக் கொண்டால், பாதிப்பு சீராகும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT