தமிழக செய்திகள்

சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது என்றும், சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் 11-ந் தேதி (வியாழக்கிழமை) வரை மிதமான மழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

அதன்படி, வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று சென்னை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கரூர், திருச்சி, நீலகிரி, கோவை, கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

நாளை (செவ்வாய்க்கிழமை) குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன முதல் மிக கனமழையும், டெல்டா மாவட்டங்கள், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும், இது மேலும் வலுப்பெற்று வட தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

அதிகனமழைக்கு வாய்ப்பு

இதன் காரணமாக, நாளை மறுதினம் (புதன்கிழமை) வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், சில நேரங்களில் அதி கனமழையும், வடக்கு கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

11-ந் தேதி (வியாழக்கிழமை) வடதமிழக கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டியுள்ள உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், சில நேரங்களில் அதிகனமழையும், நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், டெல்டா மாவட்டங்கள், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால், நாளை தெற்கு வங்க கடல், மத்திய வங்க கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும், 10 (நாளை மறுநாள்) மற்றும் 11-ந் தேதிகளில் தமிழ்நாடு கடலோர பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, ஆந்திர கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் நாளைக்குள் கரைக்கு திரும்பவேண்டும் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கின்றனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் 23 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதுபோல தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து இருக்கிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு