தமிழக செய்திகள்

கும்பகோணம் எண்ணெய் வியாபாரி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை

கும்பகோணம் எண்ணெய் வியாபாரி கொலை வழக்கில் கொலையாளிகள் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கும்பகோணம் விரைவு கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலக்காவிரி பகுதியை சேர்ந்தவர் ராமநாதன்(வயது 63). எண்ணெய் வியாபாரியான இவர், கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் 15-ந் தேதி வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

மேலும் கொலையாளிகள் ராமநாதன் வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர். கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.

இந்த கொலை-கொள்ளை தொடர்பாக கும்பகோணம் ஆல்வான்கோயில் பகுதியை சேர்ந்த தங்கபாண்டியன், மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்த ஹரிஹரன், தஞ்சாவூரை சேர்ந்த ரஞ்சன், வினோத், பாலாஜி ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கின் விசாரணை கும்பகோணம் கூடுதல் மாவட்ட(விரைவு) கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பு வக்கீல் பரணீதர், கூடுதல் தலைமை வக்கீல் சண்முகம் ஆகியோர் வழக்கை ஏற்று நடத்தினர். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி பெஞ்சமின் ஜோசப் தீர்ப்பு கூறினார்.

இதில் கொலைக்குற்றவாளிகள் 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 10 ஆண்டுகள் கூடுதல் சிறைதண்டனையும் விதிக்கப்படுவதாக கூறி இந்த தண்டனைகளை குற்றவாளிகள் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து குற்றவாளிகளும், அவர்களது உறவினர்களும் கதறி அழுதனர். இந்த வழக்கின் தீர்ப்பையொட்டி நேற்று கும்பகோணம் கோர்ட்டு வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.