தமிழக செய்திகள்

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கோவில் பூசாரிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

சென்னை எண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (70 வயது). கோவில் பூசாரியான இவர் கடந்த ஆண்டு ஜனவரி 5-ந்தேதி அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் எண்ணூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் போக்சோ சட் டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருவள்ளூர் மாவட்ட போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வக்கீல் புவனேஸ்வரி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளும் நேற்று முடிவடைந்தது. இந்த நிலையில், நீதிபதி உமாமகேஸ்வரி, குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவில் பூசாரி ராஜனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து எண்ணூர் அனைத்து மகளிர் போலீசார் ராஜனை புழல் சிறையில் அடைத்தனர்.

Also read:ஈரானுக்கு எதிரான போருக்கு பிறகு எண்ணெய் விலை குறையும் - அமெரிக்க அதிபர் டிரம்ப்