சென்னை,
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக கன மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. சார்பில் சென்னை மாநகர், புறநகர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை நீழ் சூழ்ந்து மூழ்கிய இடங்களை நேரில் பார்வையிட்டதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டன. மேலும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கட்சியின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
நான் பொதுமக்களையும், விவசாயிகளையும் நேரடியாக சந்தித்தபோது, லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளன. யூரியா, டி.ஏ.பி. உரங்கள் வரலாறு காணாத உச்ச விலைக்கு விற்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகள் முழுவதையும் மாநில அரசு அதிகாரிகளோ, அமைச்சர்களோ நேரடியாக சென்று ஆய்வு செய்யவில்லை என்ற பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.
நெற்பயிர் ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணமாக உயர்த்தி வழங்கவேண்டும். பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு சுகாதாரமான குடிநீரை உடனடியாக வழங்கவேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலையையும், முக்கியமாக தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகளின் விலைகளையும் கட்டுக்குள் கொண்டுவரவேண்டும். மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வாழ்வாதார உதவியாக ரூ.5 ஆயிரம் கொடுக்கவேண்டும்.
அத்தியாவசிய பொருட்களை வழங்கவேண்டும். மழையினால் சேதமடைந்த வீடுகள், உயிரிழந்த கால்நடை மற்றும் கேழிகளுக்கான இழப்பீட்டை உடனே வழங்கவேண்டும். பாதிக்கப்பட்ட இடங்களில் உடனடியாக மருத்துவ முகாம்களை நடத்தி, மக்களுக்கு சிகிச்சை அளிக்கவேண்டும். விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர் கடன் வழங்கவேண்டும். இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளை தி.மு.க. அரசு உடனடியாக செய்யவேண்டும்.
தி.மு.க. அரசு செய்ய தவறியதாக நாங்கள் எதை கூறினாலும், இப்போதுதான் ஆட்சிக்கு வந்ததாக கூறுகின்றனர். அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள்தான். ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்கள்தான் இப்போதும் உள்ளனர். அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபேது, நிழல் அரசாங்கத்தை நடத்தி உடனுக்குடன் அறிக்கை வெளியிட்டவர்கள், ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே சூப்பர் முதல்-அமைச்சர் என்ற பட்டத்தை சூட்டிக்கொண்ட பெருமைக்கு உரியவர்களாக காட்டிக்கொண்டவர்கள்,
அ.தி.மு.க. அரசு கொண்டுவந்து நிறைவேற்றிய பல தொழில் முதலீடுகளையும், திட்டங்களையும் தாங்களே 30 நாட்களுக்குள் கொண்டுவந்ததுபோல் பெருமை பேசியவர்கள், ஆட்சிக்கு வந்து 6 மாதங்களாகியும் நீர் வழித்தடங்களை தூர் வாராததாலும், பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததாலும் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு, அ.தி.மு.க. அரசு மீது பழிபோட்டு தப்பிக்க முயல்வதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்
அ.தி.மு.க. ஆட்சி செய்தபோது இருந்த அதே திறமை வாய்ந்த அதிகாரிகள்தான் இப்போதும் பதவியில் உள்ளனர். அப்போது, இதே அதிகாரிகள் தான் மீட்பு பணிகளில் திறம்பட ஈடுபட்டு, ஒரு சில நாட்களில் பாதிப்படைந்த பகுதிகளை சீரமைத்து இயல்பு நிலைக்கு கொண்டுவந்தனர். ஆனால் அவர்களின் திறமையினை இந்த விடியா அரசு ஏன் பயன்படுத்திக்கொள்ளவில்லை? இனியாவது இந்த அரசு விழித்துக்கொண்டு, இயற்கை பேரிடர் காலங்களில் அ.தி.மு.க. அரசு எப்படி திறம்பட செயலாற்றி, மக்களின் துயரை போக்கியதோ, அப்படி உடனடியாக நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்களை இயல்பு வாழ்க்கைக்கு தி.மு.க. அரசு கொண்டுவரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.