சென்னை,
மதுரையை சேர்ந்தவர் எம்.வி. முத்துராமலிங்கம். இவர், கடந்த 1986-ம் ஆண்டு அவருடைய தாயார் வேலம்மாள் பெயரில் சென்னை முகப்பேரில் 183 மாணவர்கள் மற்றும் 13 ஊழியர்களுடன் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றை தொடங்கினார்.
பின்னர் திருவள்ளூர், காஞ்சீபுரம், சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் வேலம்மாள் குழும நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. இதில் பொறியியல், மருத்துவம் மற்றும் பள்ளிகள் ஆகியவை வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வருகின்றன.
தற்போது, வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருவதுடன், சுமார் 10 ஆயிரம் ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றவும், தொழில் ரீதியாகவும், உறுதியுடனும், அர்ப்பணிப்புடனும், வேறுபாடுகளுடனும் இயக்குவதற்காக வீரமாகாளி நினைவு நல அறக்கட்டளை, ரமணா கல்வி அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டன.
சென்னை முகப்பேர், சூரப்பட்டு மற்றும் பொன்னேரி ஆகிய 3 இடங்களில் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை எம்.வி. முத்துராமலிங்கத்தின் மகன்கள் எம்.வி.எம்.வேல்முருகன், எம்.வி.எம்.வேல்மோகன், எம்.வி.எம்.சசிகுமார் ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர்.
இந்த கல்வி நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக வருமான வரி செலுத்துவதில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக வருமான வரித்துறை தலைமை அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 250 வருமானவரித்துறை அதிகாரிகள், 50 குழுக்களாக பிரிந்து, வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்கள், முகப்பேரில் உள்ள நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் சோதனை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், வேலம்மாள் குழுமத்தில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த சோதனை தற்காலிகமாக முடிந்திருப்பதாகவும், விசாரணை தொடரும் என்றும் வருமான வரித்துறை அறிவித்துள்ளது. வேலம்மாள் கல்வி குழுமம் ரூ.532 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமானவரித்துறை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. வருமானவரித்துறை சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.2 கோடி பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.