கோவை:
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள அப்பாச்சி கவுண்டன்பதியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 27). தொழிலாளி. இவர் கடந்த 12.9.2017 அன்று கோவை அரசு ஆஸ்பத்திரி அருகே சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதி படுகாயம் அடைந்தார்.
இதில் அவருக்கு மண்ணீரல் மற்றும் சில உறுப்புகள் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத்தொடர்ந்து தனக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி, கோவை மோட்டார் வாகன விபத்து விசாரணை கோர்ட்டில் காளிமுத்து மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, காளிமுத்துவுக்கு அரசு போக்குவரத்து கழகம் வட்டியுடன் ரூ.14 லட்சத்து 80 ஆயிரத்தை வழங்க உத்தரவிட்டது. ஆனால் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் இந்த தொகையை வழங்கவில்லை.
இதைத்தொடர்ந்து காளிமுத்து சார்பில் வக்கீல் தன்ராஜ், நிறைவேற்றக்கோரும் மனுவை தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி முனிராஜ், அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
அப்போது வக்கீல் தன்ராஜ், காளிமுத்து மிகுந்த பாதிப்பில் இருப்பதாலும், வறுமையில் இருப்பதாலும் ஒரு பஸ்சை மட்டும் ஜப்தி செய்தால் மட்டும் தொகையை கொடுக்க மாட்டார்கள். குறைந்தது 6 பஸ்களையாவது ஜப்தி செய்ய உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி 6 பஸ்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து நேற்று கோவை ரெயில் நிலையம் பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்வதற்காக வந்த 6 பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன. ஒரே நேரத்தில் 6 பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டதால் வாளையார், கணுவாய் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். பின்னர் மாற்று பஸ்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
கோவையில் ஒரு வழக்கிற்கு 6 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டது இதுவே முதன் முறையாகும். கோர்ட்டு வளாகத்தில் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் கோர்ட்டு வளாகம் பஸ் நிலையம் போல் காட்சியளித்தது.