தமிழக செய்திகள்

கடந்த 2 நாட்களில் 6 லட்சத்து 75 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்

தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் சுமார் 6 லட்சத்து 75 ஆயிரம் பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.

அரசு, தனியார் பஸ்கள் இயக்கம்

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி, நேற்றும், நேற்றுமுன்தினமும் அரசு மற்றும் தனியார் பஸ்களை இயக்கிட அனுமதி அளிக்கப்பட்டது.அதன் அடிப்படையில், பொதுமக்கள் சென்னை மற்றும் பிற ஊர்களிலிருந்து பயணித்திட ஏதுவாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனின் அறிவுறுத்தலின்படி, கடந்த 2 நாட்களாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு 1,500 பஸ்களும், மாநிலத்தின் முக்கிய நகரங்களான நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி, கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை மற்றும் முக்கிய நகரங்களுக்கு

இடையே 3 ஆயிரம் பஸ்களை இயக்கிட போக்குவரத்துத்துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

நீண்ட தூர, வெளி மாவட்ட பயணங்கள்

அதன்படி, சென்னை கோயம்பேட்டில் நேற்று காலை முதலே வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்கள் திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், மார்த்தாண்டம் உள்ளிட்ட நீண்ட தூர பயணத்திற்கும், விழுப்புரம் மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட போக்குவரத்து கழகங்களை சேர்ந்த பஸ்கள் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கும் இயக்கப்பட்டன.ஏற்கனவே, நேற்றுமுன்தினமும் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சென்னையில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில், நேற்று காலை நேரத்தில் பஸ்களில் பயணிக்க குறைந்த அளவிலான பயணிகளே வருகை தந்தனர். பிற்பகலில் இருந்து இரவு வரை அதிக அளவிலான பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர்.

6 லட்சத்து 60 ஆயிரம் பேர்

அதன்படி, நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, கடந்த 2 நாட்களில் சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு 1,331 பஸ்கள் இயக்கப்பட்டு, அதில் 65 ஆயிரத்து 746 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதே போன்று கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட மற்ற பிற ஊர்களில் இருந்து 3 ஆயிரத்து 662 பஸ்கள் பல நடைகள் இயக்கப்பட்டு, அதில் 5 லட்சத்து 94 ஆயிரத்து 638 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.மொத்தத்தில், நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, 4 ஆயிரத்து 993 பஸ்கள் மூலம் 6 லட்சத்து 60 ஆயிரத்து 384 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.

அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு

இந்த நிலையில், நேற்று இரவு 7 மணியளவில், போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், கோயம்பேடு பஸ் நிலையத்தில் பஸ்கள் இயக்கப்படுவதை ஆய்வு செய்தார்.அப்போது, நீண்ட தூரம் செல்லும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ்கள் மற்றும் பிற ஊர்களுக்கு இயக்கப்படும் பஸ்களில் பயணம் மேற்கொண்ட பயணிகளிடம் அரசு அறிவித்துள்ள நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி, கிருமிநாசினிகளை பயன்படுத்துவதுடன், கட்டாயம் முககவசம் அணிந்து பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் பயன்படுத்திட போதிய

முககவசம் மற்றும் கிருமிநாசினிகள் வழங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, போக்குவரத்துத்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் முத்துகிருஷ்ணன் மற்றும் போக்குவரத்துத்துறை தலைவர் அலுவலக தனி அலுவலர் ஜோசப் டையஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

நள்ளிரவு 11.45 மணி வரை...

நேற்று நள்ளிரவு 11.45 மணி வரையில் சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. இதே போன்று, நேற்று சென்னை கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்தும்

வெளியூர்களுக்கு கடந்த 2 நாட்களாக பஸ்கள் இயக்கப்பட்டன. அதன்படி நேற்று முன்தினம் 162 பஸ்கள் இயக்கப்பட்டு சுமார் 6 ஆயிரம் பயணிகள் வெளியூர்களுக்கு சென்று இருப்பதாகவும், நேற்று 270 பஸ்கள் இயக்கப்பட்டு சுமார் 9 ஆயிரம் பயணிகள் வெளியூர்களுக்கு பயணம் செய்து இருப்பதாகவும் அனைத்து ஆம்னி பஸ்கள் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் ஏ.அன்பழகன் தெரிவித்தார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு