தமிழக செய்திகள்

வாலிபரிடம் ரூ.6 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள ராமையன்பாளையம் கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராதா மகன் ராஜசேகர் (வயது 36). இவரும் விழுப்புரம் கே.கே.சாலையை சேர்ந்த ரங்கநாதன் மகன் அருமைநாதன் என்பவரும் விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் அருமைநாதன், ராஜசேகரிடம் சென்று தனது நண்பரான சென்னை அய்யம்பாக்கம் பெரியார் நகரில் வசித்து வரும் முனுசாமி மகன் பரணிகுமாருக்கு அரசியல் கட்சியினர் பலரை தெரியும் என்றும் அவர்கள் மூலமாக அரசு வேலை ஏதாவது வாங்கித்தருவார் என்றும், அதற்கு பணம் செலவாகும் என்றும் கூறினார்.

ரூ.6 லட்சம் மோசடி

இதை நம்பிய ராஜசேகர், தனக்கு அரசு வேலை வாங்கித்தரும்படி கேட்டு கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு அருமைநாதன் மூலமாக பரணிகுமாரிடம் ரூ.6 லட்சத்தை கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை பெற்ற அவர்கள் இருவரும் இதுநாள் வரையிலும் ராஜசேகருக்கு அரசு வேலை ஏதும் வாங்கித்தராமலும், வாங்கிய பணத்தை திருப்பித்தராமலும் ஏமாற்றி மோசடி செய்துவிட்டனர்.

இதுகுறித்து ராஜசேகர், விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பரணிகுமார், அருமைநாதன் ஆகியோரின் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.