கோவை,
கோவை ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் ஒயிட் காலர் அசோசியேட்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இங்கு முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக அறிவிப்பு வெளியிட்டனர். அதை நம்பி பலர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். அவர்களுக்கு முதலில் குறிப்பிட்ட தொகையை கொடுத்தனர். அதன்பிறகு பணம் கொடுக்கப்படவில்லை.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர்கள், கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
ரூ.63 லட்சம் மோசடி
அதில் அந்த நிதி நிறுவனம் நடத்தியவர்கள் மொத்தம் ரூ.63 லட்சத்து 72 ஆயிரத்து 600 மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த நிறுவனத்தை நடத்தி வந்த கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது 41), முருகேசன், லட்சுமி (32), தீபா (34), விமலா (38), பிரியா (46) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு கோவை டான்பிட் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் கோர்ட்டுக்கு வந்து இருந்தனர்.
10 ஆண்டு சிறை
அதன்படி குற்றம் சாட்டப்பட்ட சிவக்குமார், முருகேசன், லட்சுமி, தீபா, விமலா, பிரியா ஆகிய 6 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.72 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ரவி தீர்ப்பு கூறினார். அதில் ரூ.63 லட்சத்து 72 ஆயிரத்து 600-ஐ பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.