கரூர்,
கனடா நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி கரூர் ஆசிரியரிடம் ரூ.69 லட்சம் மோசடி செய்த மர்ம ஆசாமியை சைபர் கிரைம் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கரூர் வடிவேல் நகர் பகுதிக்குட்பட்ட சக்தி நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 36). இவர் கரூர் அருகே உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். தற்போது அவர் டியூஷன் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலைக்கு செல்ல விரும்பியுள்ளார்.
இந்தநிலையில், கனடா நாட்டில் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற தகவலை பார்த்துள்ளார். இதனைதொடர்ந்து அவர் அந்த வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பித்து உள்ளார்.
இதனை அறிந்துகொண்ட மர்ம ஆசாமி, சுரேஷிடம் செல்போனில் தொடர்பு கொண்டு தன்னை கேன்ட்ரிக் வாங் என அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார். பின்னர் அவர் கனடா நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய சுரேஷ் அந்த ஆசாமிக்கு பல்வேறு வங்கி கணக்குகளில் ரூ.69 லட்சத்து 68 ஆயிரத்து 430 செலுத்தியுள்ளார்.
ஆனால் அந்த ஆசாமி கூறியபடி வேலை வாங்கி தரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுரேஷ் இந்த சம்பவம் குறித்து கரூர் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் அம்சவேணி வழக்குப்பதிவு செய்து வேலை வாங்கி தருவதாக கூறி கரூர் ஆசிரியரிடம் ரூ.69 லட்சம் மோசடி செய்த மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்.