தமிழக செய்திகள்

நேபாளத்தில் தமிழர்கள் 7 பேர் பலி: உடல்களை சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கை - தமிழக அரசு

உடல்கள் நேபாளத்திலிருந்து விரைவில் சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட உள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாட்டின் பொள்ளாச்சி மற்றும் தேவக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த 24 நபர்கள் நேபாளம் நாட்டிலுள்ள மணகமனா கோவிலுக்கு புனித பயணம் மேற்கொண்டார்கள். தரிசனம் முடித்து வரும் வழியில் மனோக்காம் பகுதியில் 14/03/2026 அன்று அவர்கள் பயணித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 5 பெண்கள் (மீனாட்சி, சிவகாமி, விஜயாள், மீனா மற்றும் தமிழரசி), 2 ஆண்கள் (முத்துக்குமார் மற்றும் அண்ணாமலை) ஆகிய 7 நபர்கள் உயிரிழந்தனர்.

மேலும் காயமடைந்த 7 நபர்கள் (சொர்ணம் மங்கத ஜலம், சுபத்ரா மயல், சரோஜா, பாக்கியலட்சுமி மற்றும் மீனாட்சி) சித்வான் பழைய மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேற்படி தகவல் கிடைக்கப்பெற்ற உடன் தமிழ்நாடு அரசின், அயலகத் தமிழர் நலத்துறை, நேபாள நாட்டிலுள்ள தமிழ்ச்சங்க பிரதிநிதிகள், புதுடெல்லி தமிழ்நாடு இல்லம் மற்றும் மத்திய அரசின் வெளியுறவு துறையுடன் ஒருங்கிணைந்து, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் இறந்தவர்களின் உடலை தமிழ்நாடு கொண்டு வருவதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் இறந்த 7 நபர்களின் உடல்களும் பிரேத பரிசோதைனைக்கு உட்படுத்தப்பட்டு காத்மாண்டு கொண்டு செல்லப்படுகிறது. அவர்களின் உடல்கள் அங்கிருந்து விரைவில் சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட உள்ளது.

பூத உடல்கள் சென்னை விமான நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசின் கட்டணமில்லா அமரர் ஊர்தி வாகனங்களில் அவர்களின் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காயம் அடைந்த நபர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்கவும், அவர்களை விரைந்து தாயகம் அழைத்து வரவும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.