தமிழக செய்திகள்

7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா விவகாரம்: ஆளுநர் மாளிகை முன்பு திமுக ஆர்ப்பாட்டம்

7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தி, ஆளுநர் மாளிகை முன்பு திமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

தினத்தந்தி

சென்னை,

தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்கள் சமூகப் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியவர்கள் என்பதால், அவர்களைப் பிற மாணவர்களுடன் ஒரே நிலையில் ஒப்பிட்டுத் தேர்வில் வகைப்படுத்துவது என்பது சம நீதிக்கு முரணானது என்பதால் மருத்துவப் படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.

இதற்காக சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என ஒட்டுமொத்த உறுப்பினர்களும் ஆதரித்த 7.5 % இட ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில், ஒரு மாதத்திற்கு மேலாகியும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் தராததால், எப்போது ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்ப்பில் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து முடிவு எடுக்க எனக்கு 3 அல்லது 4 வாரங்கள் தேவைப்படுகிறது என்று ஆளுநர் அண்மையில் அறிவித்தார். இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு இனியும் கால அவகாசம் கோராமல், உடனே தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வண்டும் என்று அனைத்து கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்தநிலையில் 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க கோரியும்-தமிழக ஆளுநருக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்க தவறி, மாணவர்களுக்கு துரோகம் செய்யும் அதிமுக அரசைக் கண்டித்தும் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சி தலைமை அறிவித்தது.

இதன்படி, இன்று ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டம் நடைபெறுவதையொட்டி பாதுகாப்பு பணியில் இணை ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் தலைமையில் 1000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு