தமிழக செய்திகள்

காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 79,433 பேர் போட்டி

காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. இதன்படி தேர்தல் களத்தில் 79,433 வேட்பாளர்கள் உள்ளனர். 2,981 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தினத்தந்தி

தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.

9 மாவட்டங்களில் தேர்தல்

ஏனைய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, அதில் இருந்து புதிய மாவட்டங்கள் உதயமானதால், புதிய மாவட்டங்களுக்கும், பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 6 மற்றும் 9-ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

வேட்பாளர் இறுதிப்பட்டியல்

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை நடைபெற்றது. வேட்புமனு பரிசீலனை 23-ந் தேதி நடந்தது. இந்த நிலையில், நேற்று மாலை வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு உள்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சாதாரணத் தேர்தலுக் கான அறிவிப்பு 13-9-2021 அன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது.

27,002 பதவியிடங்கள்

அதன்படி, தேர்தல் அறிவிக்கப்பட்ட 27,003 பதவியிடங்களில் நீதிமன்ற வழக்கின் காரணமாக காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம், கொளத்தூர் கிராம ஊராட்சி தலைவர் பதவியிடத்திற்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மீதமுள்ள 27,002 பதவியிடங்களுக்கு 98,151 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 1,166 வேட்புமனுக்கள் உரிய பரிசீலனைக்கு பின் நிராகரிக்கப்பட்டன. 14,571 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் திரும்பப்பெற்று கொண்டனர். 2,981 பதவியிடங்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 2 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 21 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. இறுதியாக, 23,998 பதவியிடங்களுக்கு 79,433 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி

140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 1,125 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. அதில், 44 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 252 வேட்புமனுக்கள் திரும்பப்பெறப்பட்டன. 2 பதவியிடங்களுக்கு போட்டியின்றி தேர்வு பெற்றனர். தேர்தல் நடைபெற உள்ள 138 இடங்களுக்கு 827 பேர் களத்தில் உள்ளனர்.1,381 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங் களுக்கு 8,663 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில், 231 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 2,363 வேட்புமனுக்கள் திரும்பப்பெறப்பட்டன. 5 பதவியிடங் களுக்கு போட்டியின்றி தேர்வு பெற்றனர். தேர்தல் நடைபெற உள்ள 1,376 பதவியிடங்களுக்கு 6,064 பேர் களத்தில் உள்ளனர்.

கிராம ஊராட்சி தலைவர் பதவி

2,901 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கு 15,964 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஒரு இடத்தில் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 257 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 4,796 மனுக்கள் திரும்பப்பெறப்பட்டன. 119 பதவியிடங்களுக்கு போட்டியின்றி தேர்வு பெற்றனர். 2 இடங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை. மொத்தம் 2,779 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. 10 ஆயிரத்து 792 பேர் களத்தில் உள்ளனர்.

இதேபோல், 22 ஆயிரத்து 581 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 72 ஆயிரத்து 399 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதில், 634 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 7,160 மனுக்கள் திரும்பப்பெறப்பட்டன. 2,855 பேர் போட்டியின்றி தேர்வு பெற்றனர். 21 இடங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை. தேர்தல் நடைபெறவுள்ள 19 ஆயிரத்து 705 பதவியிடங்களுக்கு 61 ஆயிரத்து 750 பேர் களத்தில் உள்ளனர்.

79 ஆயிரத்து 433 பேர் போட்டி

மொத்தத்தில், 27 ஆயிரத்து 2 பதவியிடங்களுக்கு 98 ஆயிரத்து 151 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 1,166 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 14 ஆயிரத்து 571 மனுக்கள் திரும்பப்பெறப்பட்டன. 2,981 பதவியிடங்களுக்கு போட்டியின்றி தேர்வு பெற்றனர். 23 இடங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை. தேர்தல் நடைபெறவுள்ள 23 ஆயிரத்து 998 பதவியிடங்களுக்கு 79 ஆயிரத்து 433 பேர் களத்தில் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், 28 மாவட்டங் களில் நடைபெறவுள்ள தற்செயல் தேர்தல் நடைபெறும் இடங்களுக்கும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தற்செயல் தேர்தல்

தமிழகத்தில் 28 மாவட்டங்களுக்கு உள்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தலுக்கான அறிவிப்பு 13-9-2021 அன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. அதன்படி, தேர்தல் அறிவிக்கப்பட்ட 789 பதவியிடங்களுக்கு 2,547 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 80 வேட்புமனுக்கள் உரிய பரிசீலனைக்கு பின் நிராகரிக்கப்பட்டன. 716 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் திரும்பப்பெற்றுக்கொண்டனர். 365 பதவியிடங்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளன. 2 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 4 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. இறுதியாக 418 பதவியிடங்களுக்கு 1,386 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்

அதாவது, 13 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் இடங்களுக்கு 186 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. 16 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 59 வேட்புமனுக்கள் திரும்பப்பெறப்பட்டன. தேர்தல் நடைபெறவுள்ள 13 இடங்களுக்கு 111 பேர் களத்தில் உள்ளனர். 40 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் இடங்களுக்கு 376 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. அதில், 18 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 123 வேட்புமனுக்கள் திரும்பப்பெறப்பட்டன. தேர்தல் நடைபெறவுள்ள 40 பதவியிடங்களுக்கு 235 பேர் களத்தில் உள்ளனர்.

759 பேர் களத்தில் உள்ளனர்

106 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கு 519 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. அதில், 17 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 203 வேட்புமனுக்கள் திரும்பப்பெறப்பட்டன. 18 பதவியிடங்களுக்கு போட்டியின்றி தேர்வு பெற்றனர். 2 இடங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை. தேர்தல் நடைபெறவுள்ள 86 பதவியிடங்களுக்கு 281 பேர் களத்தில் உள்ளனர். 630 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 1,466 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. அதில், 29 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 331 வேட்புமனுக்கள் திரும்பப்பெறப்பட்டன. 347 பதவியிடங்களுக்கு போட்டியின்றி தேர்வு பெற்றனர். 4 இடங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை. தேர்தல் நடைபெறவுள்ள 279 இடங்களுக்கு 759 பேர் களத்தில் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் (அக்டோபர்) 12-ந் தேதி (செவ்வாய்கிழமை) நடைபெற இருக்கிறது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்