மதுரை,
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த விவகாரம் குறித்து கவர்னரால் நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் விசாரணை நடத்திவருகிறார்.
அவர் நேற்று முன்தினம் மீண்டும் 2-ம் கட்ட விசாரணையை தொடங்கினார். அவரிடம் 2 மாணவிகள் சார்பில் வக்கீல் முத்துக்குமார் மனு கொடுத்தார். மதுரை சரக கல்லூரிகளுக்கான இணை இயக்குனர் கூடலிங்கம் அவர் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். பின்னர் அவர் காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு சென்று இரவு வரை விசாரணை நடத்தினார்.
சிறையில் இருக்கும் நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்த அவருக்கு சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. அனுமதி அளித்தார். அதன்படி விசாரணை அதிகாரி சந்தானம் தனது உதவியாளர்கள் பேராசிரியை கமலி, தியாகேஸ்வரி ஆகியோருடன் நேற்று காலை 9.30 மணிக்கு மதுரை மத்திய சிறைக்கு சென்றார். அவர் சிறை சூப்பிரண்டு அறையில் வைத்து நிர்மலாதேவியிடம் தனியாக விசாரணை நடத்தினார்.
மதியம் 1.30 மணி அளவில் விசாரணை முடிந்து வெளியே வந்தார். பின்னர் அவர் மதிய உணவை முடித்துக்கொண்டு 2.50 மணிக்கு மீண்டும் சிறைக்கு சென்று நிர்மலாதேவியிடம் விசாரணையை தொடர்ந்தார். விசாரணை மாலை 6.50 மணிக்கு முடிந்தது.
பின்னர் வெளியே வந்த சந்தானம் நிருபர்களிடம் கூறியதாவது-
நிர்மலாதேவியிடம் விசாரணை இன்றோடு முடிந்துவிட்டது. வெள்ளிக்கிழமை (இன்று) அருப்புக்கோட்டை சென்று சிலரை விசாரிக்க உள்ளேன்.
கருப்பசாமி, முருகன் ஆகியோர் சிறைக்கு சென்ற பிறகுதான் விசாரிக்க முடியும். அவர்களை விசாரித்தபின் தான் அறிக்கையை தாக்கல் செய்யமுடியும். 30-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். அது முடியாது என்பதால் விசாரணை காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம்.
எத்தனை கேள்விகள் கேட்கப்பட்டது என்பது பற்றி கூறமுடியாது. நேரில் வரவிரும்பாத சிலர் கடிதம் மூலம் புகார் கொடுத்துள்ளனர்.
எங்களது விசாரணையில் நம்பிக்கை இல்லை என்றும், மனு கொடுத்தால் பலன் இருக்காது என்றும் சிலர் கூறுகிறார்கள். நான் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. எனவே அவர்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களிடம் புகார் கொடுக்கலாம். என்னுடன் பல்கலைக் கழக ஊழியர்கள் யாரும் கிடையாது. என்னுடைய பேராசிரியர்கள் தான் குழுவில் உள்ளனர்.
இவ்வாறு தெரிவித்தனர்.
பேராசிரியை நிர்மலாதேவி சுட்டிக்காட்டிய மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகனை ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். கோர்ட்டில் சரண் அடைந்த பேராசிரியர் கருப்பசாமியை 10 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று சாத்தூர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கீதா, 4 நாள் அனுமதி வழங்கி, 30-ந்தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து கருப்பசாமிக்கு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டார். பேராசிரியர்கள் இருவரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
பேராசிரியர் முருகன், இப்பிரச்சினை குறித்த விவரங்கள் பேராசிரியர் கருப்பசாமிக்கு தான் தெரியும் என போலீசாரிடம் ஏற்கனவே தெரிவித்ததாக கூறப்படுகிறது.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரிடம் ஒரே நேரத்தில் விசாரணை நடத்தினால் தான் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட நபர்கள் யார், யாருக்காக மாணவிகளுக்கு பாலியல் அழைப்பு விடுக்கப்பட்டது என்ற விவரங்கள் தெரிய வாய்ப்பு உள்ளது என்றார்.
பேராசிரியர் கருப்பசாமியின் நண்பரான வரலாற்று ஆராய்ச்சி மாணவர் தங்கப்பாண்டியன் 3 நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு ஆஜரானார். 3 நாட்கள் ஆகியும் அவரிடம் விசாரணையை முடித்து வெளியில் அனுப்பாதது ஏன் என்று தெரியவில்லை. தங்கப்பாண்டியன் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்கனவே மறுத்துள்ளனர்.