சென்னை,
தமிழகத்தில் ரூ.2,368 கோடி முதலீட்டில் 24,870 பேருக்கு வேலை அளிக்கும் புதிய 8 நிறுவனங்களின் தொழில் திட்டங்களுக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் 8 புதிய தொழில் திட்டங்களுக்கு 27-ந் தேதி தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தில் ரூ.1,500 கோடி முதலீட்டில், 23 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கேப்பிடலாண்ட் நிறுவனத்தால் கட்டப்படும் இண்டர்நேஷனல் டெக்பார்க் சென்னை, ரேடியல் ரோடு தகவல் தொழில்நுட்ப பூங்கா திட்டம், கடலூர் மாவட்டம் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.350 கோடியில் 300 பேருக்கு வேலைவாய்ப்புக்கான டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் சிலிக்கா உற்பத்தி திட்டம், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள மஹிந்திரா ஆரிஜின்ஸ் தொழிற்பூங்காவில் ரூ.105 கோடியில் 160 பேருக்கு வேலைவாய்ப்புக்கான ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிஸெய் எலக்ட்ரிக் நிறுவனத்தின் மின்சார மற்றும் மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம், அங்கு ரூ.100 கோடியில் 100 பேருக்கு வேலைவாய்ப்புக்கான ஜப்பானின் உசுய் சுசிரா நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம்.
செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா வொர்ல்ட் சிட்டி தொழிற்பூங்காவில் ரூ.100 கோடியில் 300 பேருக்கு வேலைவாய்ப்புக்கான டைநெக்ஸ் நிறுவனத்தின் டீசல் என்ஜின்களுக்கான எக்ஸ்ஹாஸ்ட் உற்பத்தி திட்டம், காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரூ.150 கோடியில் 300 பேருக்கு வேலைவாய்ப்புக்கான ஸ்டீல் ஷாப்பி நிறுவனத்தின் வாகன தொழிற்சாலைகளுக்கான எக்கு பாகங்கள் உற்பத்தி திட்டம், கடலூர் மாவட்டம் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.47 கோடியில் 550 பேருக்கு வேலைவாய்ப்புக்கான எம்.ஆர்.சி. மில்ஸ் நிறுவனத்தின் டெக்ஸ்டைல் பிராச்சிங் திட்டம், விழுப்புரம் மாவட்டம் கம்பூரில் ரூ.16 கோடியில் 160 பேருக்கு வேலைவாய்ப்புக்கான ராஜராஜேஸ்வரி லைப் கேர் நிறுவனத்தின் மருந்து மற்றும் மருத்துவப் பொருட்கள் (கொரோனா மருந்துபொருள் உள்பட) உற்பத்தி திட்டம் என 8 திட்டங்களின் மூலம் தமிழ்நாட்டிற்கு ரூ.2,368 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 24 ஆயிரத்து 870 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வானூர்தி தொழிற்பூங்காவில், டிட்கோ மற்றும் டைடல் நிறுவனங்களின் ரூ.250 கோடி முதலீட்டில் வானூர்தி உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கான ஏரோ ஹப் உயர்நுட்ப தொழில் மையத்திற்கும் முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
ரூ.3,185 கோடி முதலீட்டில், 6,955 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள 11 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியை அவர் தொடங்கி வைத்தார். காஞ்சீபுரம் மாவட்டத்தில் கேப்பிட்டலேண்ட் தொழிற் பூங்காவில் ரூ.730 கோடி முதலீட்டில் 875 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், அமெரிக்காவின் டிபிஐ காம்போசிட்ஸ் நிறுவனத்தின் விண்ட் பிளேடு உற்பத்தி திட்டம், அங்கு ரூ.608 கோடி முதலீட்டில் 250 பேருக்கு வேலைவாய்ப்புக்கான குளோவிஸ் ஹூண்டாய் நிறுவனத்தின் வாகன உதிரி பாகங்கள் நிட்டிங், பேக்கிங் திட்டம், ஸ்ரீபெரும்புதூரில் ரூ.500 கோடியில் 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புக்கான ஜப்பானின் சோஜிட்ஸ் மதர்சன் நிறுவனத்தின் தொழிற் பூங்கா திட்டம், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ரூ.350 கோடியில் 625 பேருக்கு வேலைவாய்ப்புக்கான ராஜபாளையம் மில்ஸ் நிறுவனத்தின் ஜவுளி உற்பத்தி திட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.220 கோடியில் 300 பேருக்கு வேலைவாய்ப்புக்கான கல்ப் ஆயில் நிறுவனத்தின் மசகு எண்ணெய் திட்டம், காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரூ.80 கோடியில் 100 பேருக்கு வேலைவாய்ப்புக்கான மட்டாடீ நிறுவனத்தின் கிடங்கு திட்டம்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.75 கோடி முதலீட்டில் 300 பேருக்கு வேலைவாய்ப்புக் கான ஹிப்ரோ ஹெல்த்கேர் நிறுவனத்தின், மருந்து மற்றும் மருத்துவப் பொருட்கள் உற்பத்தி திட்டம், சிப்காட் சிறுசேரி தொழில் நுட்பப் பூங்காவில் ரூ.24 கோடியில் 330 பேருக்கு வேலைவாய்ப்புக் கான டிசிஎஸ் நிறுவனத்தின் தகவல் தொழில் நுட்ப சேவைகள் (முதல் கட்டம்) திட்டம், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ரூ.451 கோடி முதலீட்டில் 1,150 பேருக்கு வேலைவாய்ப்புக்கான மோதி ஸ்பின்னர்ஸ், லக்கி யார்ன் டெக்ஸ், லக்கி வீவ்ஸ் நிறுவனங்களின் நூல்கள் மற்றும் ஆடைகள் உற்பத்தி திட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இண்டோஸ்பேஸ் தொழிற்பூங்காவில் ரூ.100 கோடி முதலீட்டில் 75 பேருக்கு வேலைவாய்ப்புக்கான மகிந்திரா ஸ்டீல் சர்வீசஸ் நிறுவனத்தின் வாகன தொழிற்சாலைகளுக்கான எக்கு பாகங்கள் உற்பத்தி திட்டம், காஞ்சீபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ரூ.47 கோடியில் 950 பேருக்கு வேலைவாய்ப்புக்கான டீமேஜ் பில்டர்ஸ் நிறுவனத்தின் கட்டுமான பொருட்கள் உற்பத்தி திட்டம், என மொத்தம் 11 திட்டங்களின் மூலம், தமிழ்நாட்டிற்கு ரூ.3,185 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 6,955 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
2019-ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. 27-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்டுள்ள 8 திட்டங்களையும் சேர்த்து, இதுவரை 272 திட்டங்கள் செயல்பாட்டு நிலையில் உள்ளன.
2015-ம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. 27-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்ட 2 திட்டங்களையும் சேர்த்து 71 திட்டங்கள் செயல்பாட்டு நிலையில் உள்ளன.
2019-2020-ம் ஆண்டிற் கான இடைக்கால பங்கு ஈவுத் தொகையாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (டிட்கோ) சார்பில் ரூ.37 கோடியே 3 லட்சத்து 3 ஆயிரத்து 205 மற்றும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் (சிப்காட்) சார்பில் ரூ.40 கோடி பங்கு ஈவுத் தொகைக்கான காசோலைகளை தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் முதல்- அமைச்சரிடம் வழங்கினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.