சென்னை,
கரூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறையில், சாலை அமைக்காமலேயே அமைத்துவிட்டதாக கூறி ரூ.3 கோடி முறைகேடு செய்துள்ளதாக, அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார் தெரிவித்து இருந்தார். இந்த புகாரின்பேரில் நெடுஞ்சாலைத்துறை விசாரணை நடத்தி அதிகாரிகள் 8 பேரை தற்காலிக பணி நீக்கம் (சஸ்பெண்ட்) செய்துள்ளது.
எ.வ.வேலு உத்தரவு
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கரூர் மாவட்டத்தில் சாலையை அகலப்படுத்தி மேம்படுத்தவும் மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் சில பணிகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டு, ஒப்பந்ததாரரிடம் பணி ஒப்படைக்கப்பட்டது. ஒப்பந்ததாரர் பணி முடிக்கும் முன்னரே ஒப்பந்த தொகையை கோட்ட பொறியாளர்கள் ஒப்பந்ததாரருக்கு வழங்கிவிட்டனர் என்ற குற்றச்சாட்டு பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. உடனடியாக அவர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
பணி முடிக்கும் முன்னரே ஒப்பந்த தொகையை வழங்கிய செயல் சட்டத்துக்கு புறம்பானதாகும். உடனடியாக திருப்பூர் மற்றும் சேலம் கண்காணிப்பு பொறியாளர்கள் விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். கண்காணிப்பு பொறியாளர்கள் அளித்த பூர்வாங்க அறிக்கையில் இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அலுவலர்களை தற்காலிக பணி நீக்கம் செய்ய அரசு அறிவுறுத்தியது.
8 பேர் பணியிடை நீக்கம்
கண்காணிப்பு பொறியாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் கரூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தில் பணிபுரிந்து வந்த கரூர் கோட்டப் பொறியாளர் ஆர்.பி.சத்தியபாமா, கரூர் உதவி கோட்டப் பொறியாளர் ஆர்.கண்ணன், கரூர் இளநிலை பொறியாளர் பூபாலசிங்கம், கரூர் கோட்டக் கணக்கர் கே.பெரியசாமி, ஈரோடு நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் கோட்டத்தில் பணிபுரிந்து வந்த ஈரோடு கோட்டப் பொறியாளர் வெ.வெ.நித்திலன், கரூர் உதவி கோட்டப் பொறியாளர் முகமது ரபீக், கரூர் உதவிப் பொறியாளர் தீபிகா, ஈரோடு கோட்டக் கணக்கர் சத்யா ஆகியோர் உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ஒட்டுமொத்தமாக நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் உள்பட 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.