சென்னை,
நாடு முழுவதும் முதல் அலை உருவான போது ஆல்பா வகை வைரஸ் தொற்று காணப்பட்டது. பின்னர் அந்த ஆல்பா வகை வைரஸ் தன்னை காத்து கொள்ள உருமாற்றம் அடைந்தது. உருமாற்றம் அடைந்த அந்த வைரஸ், டெல்டா வகை வைரஸ் என பெயரிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அதிலிருந்தும் உருமாற்றம் அடைந்த புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அதனை டெல்டா பிளஸ் என உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் 2-வது அலையில் அதிக பாதிப்பு ஏற்பட்டதால், வைரசின் மரபணுவை ஆய்வு செய்து தமிழகத்தில் எந்த வகையான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய தமிழக பொது சுகாதாரத் துறைத் திட்டமிட்டது.
அந்த ஆய்வுக்காக, தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் சளி மாதிரிகளை பரவலாக ஆய்வுக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகத்தில் டெல்டா பிளஸ் பாதிப்பின் தாக்கத்தை முழுமையாக அறிய முடியும் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியா முழுவதும் இதுவரை 48 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் அதிகம்
அதில் நாட்டிலேயே அதிகபட்சமாக மராட்டியத்தில் 20 பேருக்கு அத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தான் அதிக அளவில் டெல்டா பிளஸ் தாக்கம் காணப்படுகிறது. இது தமிழகத்தில் 3-வது அலைக்கான தொடக்கமாக இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், 2-வது அலையின்போது தமிழகத்தில் பாதிப்புக்குள்ளானவர்களில் 1,159 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவை கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள வைரஸ் மரபணு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவுகளில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
அதேவேளையில் 3 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டது. சென்னை, காஞ்சீபுரம், மதுரையைச் சேர்ந்த 3 பேரின் மாதிரிகளில் அத்தகைய பாதிப்பு இருந்தது. அதில் மதுரையைச் சேர்ந்தவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த போது உயிரிழந்துவிட்டார். இதற்கிடையில் மற்றொரு புறம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்கும் தேசிய தொற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், தமிழகத்தின் பல இடங்களிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவை ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தில் 6 பேருக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தவகையில் தமிழகத்தில் இதுவரை 9 பேருக்கு டெல்டா பிளஸ் பாதிப்பை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உறுதி செய்துள்ளது.