சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (24.2.2026) கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம், பெருமாள்புரத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் 7 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 90 வீடுகள், முகாம் வாழ் தமிழர்களால் திறந்து வைக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்கள் அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் பெருமாள்புரத்திலும், பழவிளையிலும் செயல்பட்டு வருகின்றது. அதேபோன்று விளவங்கோடு வட்டத்தில் கோழிவிளை மற்றும் ஞாரான்விளையிலும் செயல்பட்டு வருகிறது. மேற்காணும் முகாம்களில் சுமார் 1200 இலங்கை தமிழ் மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், அவர்களின் வாழ்க்கை தரம் மேம்பட தமிழ்நாடு அரசு மாதந்தோறும் பணக்கொடை, இலவச அரிசி மற்றும் ரேஷன் பொருட்கள், இலவச மின்சாரம், ஆண்டுக்கொருமுறை துணிகள், பாத்திரங்கள் ஆகியவற்றை வழங்குகிறது. அத்துடன், முகாம் வாழ் மக்களுக்கு அவர்களின் திறமைக்கேற்ப தையல் பயிற்சி, ஓவியப் பயிற்சி போன்ற திறன்மிகு சுயதொழில் மூலம் வருமானம் ஈட்டும் வகையில் கட்டணமில்லாமல் பயிற்சிகளை வழங்கி அவற்றில் சிறந்தவர்களுக்கு தொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கடனுதவிகளும் வழங்கி வருகின்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த முதல்-அமைச்சர் அவர்கள், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட போது, நாளை (25.2.2026) நடைபெறவுள்ள அரசு விழாவில் திறக்கப்படவிருந்த பெருமாள்புரம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக கட்டப்பட்டுள்ள 90 குடியிருப்புகளை, இன்று (24.2.2026) நேரில் சென்று முகாம்வாழ் தமிழர்களை திறந்து வைக்க கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் முன்னிலையில் அக்குடியிருப்புகள் முகாம் வாழ் தமிழர்களால் திறந்து வைக்கப்பட்டது. முதல்-அமைச்சர் , அவ்வீடுகளை பார்வையிட்டு, முகாம் வாழ் தமிழர்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது, முகாம் வாழ் தமிழர்கள் நாளை திறக்கப்படவிருந்த குடியிருப்புகளை, இன்றே திறந்து வைத்திருப்பது தங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது என்றும், புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகள் தரமானதாக உள்ளதாகவும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் அனைவருக்கும் கிடைத்துவருவதாகவும் கூறி,நன்றி தெரிவித்துக்கொண்டனர். மேலும், தங்களுக்கு நியாயவிலைக் கடை மற்றும் சமுதாய நலக் கூடம் அமைத்துத் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். முதல்-அமைச்சர் , அக்கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித்தர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். என தெரிவிக்கப்பட்டுள்ளது.