ராமேசுவரம்,
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 90-வது பிறந்த நாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி ராமேசுவரம் பேய்கரும்பில் உள்ள கலாம் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கும், நினைவிடத்திலும் பல்வேறு தரப்பினரும், மாணவ-மாணவிகளும் மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
முன்னதாக கலாம் நினைவிடத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் கலாமின் அண்ணன் மகள் நசீமா மரைக்காயர், மகன் ஜெய்னுலாபுதீன், மருமகன் நிஜாமுதீன், பேரன்கள் ஷேக் தாவூது, ஷேக் சலீம், சினிமா நடிகர் தாமு உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கலாமின் குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
கலெக்டர்-எம்.எல்.ஏ.
தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) காமாட்சி கணேசன், ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர்பாட்சா முத்துராமலிங்கம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமானோர் மரியாதை செலுத்தினார்கள்.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகம் இருந்ததால் கலாமின் பிறந்த நாளான்று, கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்த பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு கொரோனா குறைந்து வருவதன் எதிரொலியாக கலாமின் பிறந்த நாளான நேற்று அவரது நினைவிடத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். வந்திருந்த அனைவருக்கும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.