தமிழக செய்திகள்

தந்தை திட்டியதால் 10-ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு

தந்தை திட்டியதால் மனமுடைந்த 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூரை சேர்ந்தவர் வீராசாமி. அவரது மனைவி பத்மா. இந்த தம்பதிக்கு கவிநிகா (17 வயது), மவுனிகா (15 வயது) என்ற 2 மகள்கள் இருந்தனர். வீராசாமி குருவரெட்டியூரில் சலூன் கடை நடத்தி வருகிறார். கவிநிகா தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். மவுனிகா அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் 3 மணியளவில் வீட்டில் அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது வீராசாமி தனது முதுகில் அரிப்பு ஏற்படுகிறது அதனை சொரிந்துவிடு என மவுனிகாவிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் வீராசாமியின் முதுகில் ஓங்கி அடித்துள்ளார். இதனால் அவரை வீராசாமி திட்டினார்.

இதனால் மனமுடைந்த மவுனிகா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். உடனடியாக படுக்கை அறைக்குள் சென்று கதவை தாழ்ப்பாள் போட்டுக் கொண்டார். இதனால் பதறிய பெற்றோர் கதவை திறக்க முயன்றுள்ளனர். ஆனால் முடியவில்லை. பின்னர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது, மவுனிகா சேலையால் தூக்குப்போட்டு தொங்கியது தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த அவர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று மவுனிகாவை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு மவுனிகா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.