தமிழக செய்திகள்

மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு 3 மாத குழந்தை துண்டு, துண்டாக வெட்டிக்கொலை மளிகை கடைக்காரர் கைது

மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு 3 மாத ஆண் குழந்தையை துண்டு, துண்டாக வெட்டிக்கொலை செய்த மளிகை கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 30), தனது வீட்டின் அருகில் மளிகைக்கடை நடத்திவருகிறார். இவருக்கும், ராஜேஸ்வரி (25) என்ற பெண்ணுக்கும் 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த அக்டோபர் மாதம் ராஜேஸ்வரிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சர்வேஸ்வரன் என்று பெயரிட்டனர்.

ராஜேஸ்வரியின் நடத்தையில் கார்த்திகேயன் சந்தேகப்பட்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அவருக்கு குழந்தை சர்வேஸ்வரன் மீதும் வெறுப்பு ஏற்பட்டது. இதனால் குழந்தையை கொலை செய்ய அவர் முடிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் தூக்கத்தில் இருந்து எழுந்த கார்த்திகேயன், தூங்கிக்கொண்டிருந்த சர்வேஸ்வரனை கொடுவாளால் கொடூரமாக வெட்டி கொலை செய்தார். இதில் குழந்தையின் உடல் துண்டு, துண்டாக சிதறி விழுந்தது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி சத்தம் போட்டார். உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து வந்து தப்பி ஓட முயன்ற கார்த்திகேயனை சுற்றிவளைத்து பிடித்தனர். தகவல் அறிந்த வாணாபுரம் போலீசார் விரைந்து சென்று கார்த்திகேயனை கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எங்களுக்கு திருமணமாகி 3 வருடத்துக்கு மேலாக குழந்தை இல்லை. கடந்த அக்டோபர் மாதம் ராஜேஸ்வரிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு சர்வேஸ்வரன் என்று பெயர் வைத்தோம். என் மனைவியின் நடத்தையில் ஏற்கனவே சந்தேகம் இருந்துவந்தது. இதனால் சர்வேஸ்வரன் எனக்கு பிறந்திருக்கமாட்டான் என்று தோன்றியது.

எவனுக்கோ பிறந்த குழந்தை, என்னை நாளை அப்பா என்று கூப்பிடுவதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது. அதனால் அவனை கொன்றுவிடலாம் என்று நினைத்து இருந்தேன். நான் இதை அடிக்கடி எனது மனைவி மற்றும் தந்தையிடமும் கூறியிருக்கிறேன். ஆனால் அவர்கள் என்னை கேலி செய்வது போல் பேசுவார்கள்.

நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வீட்டில் விறகு வெட்டுவதற்காக பயன்படுத்தும் கொடுவாளை எடுத்து சர்வேஸ்வரனை வெட்டி கொலை செய்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு