ராணிப்பேட்டை,
சென்னை அடையாறு பகுதியை சேர்ந்தவர் திருமால் (வயது 37). இவரது அக்கா எழிலரசி (40). திருமாலின் மகன் தருண் (14), மகள்கள் தரணிகா (14), தனுஷ்கா (14). இவர்கள் 3 பேரும் ஒரே பிரசவத்தில் பிறந்தவர்கள்.
தங்களது சொந்த ஊரான வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்துக்கு நேற்று முன்தினம் திருமால் குடும்பத்தினருடன் சென்றிருந்தார். அங்கு உறவினர் திதியை முடித்துவிட்டு, நேற்று சென்னைக்கு வாடகை காரில் புறப்பட்டார்.
லாரி மீது கார் மோதி 3 பேர் பலி
மதியம் 2 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவை அடுத்த குடிமல்லூர் என்ற இடத்தில் பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு சாலை ஓரம் கன்டெய்னர் லாரி ஒன்று பழுதாகி நின்று கொண்டிருந்தது. இந்த நேரத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கன்டெய்னர் லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதி அதன் அடியில் புகுந்தது.
இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி கார் டிரைவர் அய்யப்பன், திருமால் மற்றும் எழிலரசி ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் திருமாலின் மகன் தருண், மகள்கள் தரணிகா, தனுஷ்கா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
சிகிச்சை
விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 3 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து போன கார் டிரைவர் அய்யப்பனுக்கு வயது 26. அவரது சொந்த ஊர் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ஆகும்.