தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 2-ம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணால் செய்யப்பட்ட சிறந்த வேலைப்பாடுகளுடன் கூடிய கலயம் கிடைத்துள்ளது. வசதி படைத்தவர் வீடுகளுக்கு அலங்கார பொருட்களாக இதனை பயன்படுத்தி இருக்கலாம். சேதமடைந்த நிலையில் குவளை, மூடி ஆகியவையும் கிடைத்துள்ளன. சுண்ணாம்பு கூடம் இப்பகுதியில் இயங்கி இருக்கலாம். சுண்ணாம்பு கூடத்தில் குவளை மூலம் சங்கு வளையல்களை பளபளப்பாகவும், வர்ணம் பூசவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் நாளை மறுதினம் முடிவடைகிறது. இதுவரை 4,190 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 2-ம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களை சுத்தம் செய்யும் பணி முழுமையாக முடிந்துள்ளது. அரசின் ஒப்புதல் பெற்ற பின் கண்காட்சியில் வைக்க ஏற்பாடு செய்யப்படும் என அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார். 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.