தமிழக செய்திகள்

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் தளர்வில்லா முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஒருவார கால தளர்வில்லா முழு ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டன. சாலைகளும் வெறிச்சோடின.

சென்னை,

கொரோனா 2-வது அலை பரவல் தமிழகத்தையே ஆட்டிவைத்து கொண்டிருக்கிறது. தடுப்பூசி போடும் பணிகளும், தடுப்பு நடவடிக்கைகளும் என அரசு ஒருபுறம் நடவடிக்கைகளை கையாண்டாலும், கொரோனா பரவல் தீவிரம் குறைந்தபாடில்லை. இரவு நேர ஊரடங்கு, முழு நேர ஊரடங்கு, கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு என பல கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் கொரோனா வீரியத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையே இருக்கிறது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் ஒருவார காலம் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தெரிவித்தார். ஊரடங்கையொட்டி பொதுமக்கள் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள ஏதுவாக 2 நாட்கள் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, கடைகள் திறக்கப்பட்டன. மக்களும் தேவையான பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக்கொண்டனர்.

தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்

அந்தவகையில் தமிழகம் முழுவதும் ஒருவார கால தளர்வு இல்லா ஊரடங்கு நேற்று அமலுக்கு வந்தது. இதையொட்டி மாநிலம் முழுவதும் கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டன. இதுநாள் வரை காலை 10 மணி வரை செயல்பட்டு வந்த மளிகை-காய்கறி கடைகளும் முழுவதும் அடைக்கப்பட்டன. இதனால் கடைவீதிகள் நிறைந்த பகுதிகள் யாவும் நேற்று முழுவதுமாக அடைக்கப்பட்டு ஆள் அரவமின்றி காட்சி தந்தது.

அதேபோல வாகன நடமாட்டமின்றி சாலைகளும் வெறிச்சோடின. முக்கிய சாலைகள் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டன. இணைப்பு சாலைகள், மேம்பாலங்கள் மூடப்பட்டன. அந்தவகையில் பரபரப்பான சாலைகள் அனைத்தும் நேற்று வெறிச்சோடி போனதை பார்க்க முடிந்தது.

கடைகள் முழுவதுமாக அடைப்பு

தலைநகர் சென்னையில் நேற்று தளர்வில்லா முழு ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. அரசு அறிவிப்பின்படி, மளிகை-காய்கறி கடைகளும் நேற்று முதல் மூடப்பட்டன. இதனால் தியாகராயநகர், பாரிமுனை, புரசைவாக்கம், அண்ணாநகர், பெரம்பூர், வண்ணாரப்பேட்டை கடைவீதிகள் நிறைந்த பகுதிகள் அனைத்தும் நேற்று முழுவதுமாக வெறிச்சோடி காணப்பட்டது. பரபரப்புக்கு பஞ்சமில்லாத சென்னையின் குட்டி வணிகத்தீவு எனப்படும் தியாகராயநகர் ரங்கநாதன் தெரு நேற்று ஆள் அரவமின்றி காணப்பட்டது.

ஆஸ்பத்திரிகள், மருந்தகங்கள், ஆவின் பாலகங்கள், ஸ்கேன் மையங்கள், ஆய்வகங்கள் தவிர்த்து நகரில் உள்ள அனைத்து கடைகளும் நேற்று முழுமையாக மூடப்பட்டிருந்தன. இதனால் ஆரவாரமான பகுதிகள் அனைத்தும் நேற்று ஊரடங்கு காரணமாக அடங்கி போனது.

சாலைகள் வெறிச்சோடின

அதேபோல சாலைகளிலும் நேற்று வாகன ஓட்டிகள் தேவையின்றி சுற்றாதபடி ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அண்ணாசாலை, காமராஜர் சாலை, எல்.பி.சாலை, சர்தார் பட்டேல் சாலை, உஸ்மான் சாலை, பெரியார் சாலை என நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் ஆங்காங்கே தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டன. பல இடங்களில் இருவழி சாலைகள் ஒருவழி பாதையாக மாற்றப்பட்டு இருந்தன.

ஒரு சில முக்கியமான மேம்பாலங்கள் தவிர அனைத்து மேம்பாலங்களும் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டன. இத்தனை நாட்களாக ஊரடங்கு அமலில் இருந்தாலும் சாலைகளில் வாகனங்களின் நடமாட்டத்தை குறைக்க முடியவே இல்லை. வழக்கம்போலவே சாலைகளில் ஆர்ப்பரித்த வாகனங்களை பார்க்கமுடிந்தது. இந்தநிலையில் தளர்வில்லா முழு ஊரடங்கு காரணமாகநேற்று வாகன நடமாட்டம் பெருமளவு குறைந்திருந்ததை பார்க்கமுடிந்தது.

மீன் மார்க்கெட்டுகள் மூடல்

குறிப்பாக இதுவரை செயல்பட்டு வந்த மீன் மார்க்கெட்டுகள் அனைத்தும் நேற்று மூடப்பட்டிருந்தன. வானகரம் மீன் மார்க்கெட் உள்பட நகரின் முக்கிய மீன் சந்தைகள் அனைத்தும் அரசு அறிவிப்பின்போது மூடப்பட்டிருந்தது. அதேபோல இறைச்சி கடைகள், கருவாடு கடைகள் என அனைத்துமே மூடப்பட்டிருந்தது.

ஏற்கனவே முந்தைய ஊரடங்கின்போது வெளியிட்ட அறிவிப்புகளின்படி கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், சலூன்கள், அழகுசாதன நிலையங்கள், டாஸ்மாக் கடைகள், மால்கள், பெரிய அரங்குகள், கேளிக்கை விடுதிகள், வணிக வளாகங்கள் அனைத்துமே மூடப்பட்டிருந்தன.

போலீசார் தீவிர கண்காணிப்பு

அதேபோல சாலைகளில் போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். உரிய ஆவணங்கள் வைத்திருந்தோர் மற்றும் அவசர தேவைகளுக்காக செல்வோரை போலீசார் அனுமதித்தனர். மேலும் வாகனங்களிலும் போலீசார் ரோந்து சென்று சாலைகளில் தேவையில்லாமல் கூட்டம் கூட்டமாக நிற்பவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

தேவையில்லாமலும், அத்தியாவசிய காரணங்கள் இன்றியும் சுற்றியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

முந்தைய ஊரடங்கு போல இல்லாமல் நேற்றைக்கு அமலுக்கு வந்த தளர்வில்லா முழு ஊரடங்கு ஓரளவு பொதுமக்களின் இயல்பு நடவடிக்கைகளில் சற்று மாற்றத்தை ஏற்படுத்தியிருந்ததை உணரமுடிந்தது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்