விக்கிரமசிங்கபுரம்:
பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், மிளா உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த நிலையில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை கோட்டம் பாபநாசம் முண்டந்துறை வனச்சரகத்திற்கு உட்பட்ட தைலாத்து ஓடை பகுதியில் வனத்துறையினர் நேற்று வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு யானை மலையில் இருந்து தவறி பாறையில் விழுந்து இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப்பிரியா கூறுகையில், ''பாபநாசம் முண்டந்துறை வனப்பகுதியில் மலையில் இருந்து தவறி விழுந்து இறந்த யானை 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஆகும். அந்த யானை இறந்து 10 நாட்களுக்கு மேலானதால் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அந்த யானை இறந்து கிடந்த இடம் அடர்ந்த வனப்பகுதி என்பதால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மருத்துவ குழுவினர் சென்று பிரேத பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது'' என்றார்.