தமிழக செய்திகள்

சுற்றுலா நிறுவனத்துக்கு ரூ.22 ஆயிரம் அபராதம் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி சுற்றுலா நிறுவனத்துக்கு ரூ.22 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

நாகர்கோவில்:

சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி சுற்றுலா நிறுவனத்துக்கு ரூ.22 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

சுற்றுலா நிறுவனம்

நாகர்கோவில் அருகே உள்ள முட்டம் பகுதியை சேர்ந்தவர் யுஜின் சஜித். இவர் நாகர்கோவில் கே.பி. ரோட்டில் உள்ள ஒரு சுற்றுலா நிறுவனத்திடம் 17 பேர் அடங்கிய ஒரு குழுவாக திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களுரு வழியாக புனே செல்வதற்கு பணம் செலுத்தி இருந்தார். சுற்றுலா நிறுவனமும் யுஜின் சஜித் உள்பட 17 பேருக்கு விமான டிக்கெட் பதிவு செய்து அனுப்பி இருந்தது. திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்றடைந்த குழுவினர் நேரமின்மை காரணமாக புனே செல்லும் விமானத்தை பிடிக்க இயலவில்லை.

இதனால் மீண்டும் கட்டணம் செலுத்தி புதிதாக பயணச் சீட்டு பெற்று வேறு ஒரு விமானம் மூலம் புனேவுக்கு சென்றடைந்தனர். பின்பு சுற்றுலா நிறுவனத்திடம் தாங்கள் பயணம் செய்யாத விமானக் கட்டணத்தை திரும்பத் தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் சுற்றுலா நிறுவனம் பணத்தை திரும்ப வழங்கவில்லை.

ரூ.22 ஆயிரம் அபராதம்

இதுபற்றி யுஜித் சஜித் உள்பட 17 பேரும் வக்கீல் மூலம் சம்பந்தப்பட்ட சுற்றுலா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினர். ஆனாலும் உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் சுற்றுலா நிறுவனத்தின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்டவாகளுக்கு பயணம் செய்யாத விமான கட்டணம் ரூ.60 ஆயிரம், நஷ்டஈடு ரூ.17 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.82 ஆயிரத்தை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.