மதுரை,
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்காக சென்ற 36 பேர் காட்டுத் தீயில் சிக்கினர். இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். அவர்களது உடல் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டது.உயிருக்கு போராடிய 27 பேர் மீட்கப்பட்டு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. 14 பேர் மதுரை ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.இதில் சென்னை வேளச்சேரியைச்சேர்ந்த நிஷா (வயது20) நேற்று மாலை உயிரிழந்தார். இதனால் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையை சேர்ந்த ஜெயஸ்ரீ. ஏர்ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கோவைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் மதுரை ஆஸ்பத்திரிகளில் 12 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களை காப்பாற்ற மருத்துவக்குழுவினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் இருந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். தீக்காயம் அடைந்து மதுரை ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு நேரில் பார்த்தார். அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவக்குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். அவர்களது உறவினர்களிடமும் ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில், தீக்காயமடைந்தோரில் 50% பேர் கவலைக்கிடமாக உள்ளனர், அவர்கள் 24 மணிநேர கண்காணிப்பில் உள்ளனர் என்று மதுரையில் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தீ விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் உறவினர்கள் ஆஸ்பத்திரி வளாகங்களில் கண்ணீருடன் சோகமே உருவான நிலையில் அமர்ந்துள்ளனர். அவ்வப்போது மருத்துவக் குழுவினரிடம் உடல்நிலை குறித்து விசாரித்தப்படி கண்கலங்கி அமர்ந்திருக்கும் காட்சி பரிதாபமாக உள்ளது.