சென்னிமலை
சென்னிமலை அருகே உள்ள வெள்ளோட்டை சேர்ந்தவர் ஜான்சன் (வயது 34). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு தன்னுடைய நண்பர்களுடன் வெள்ளோடு அருகே உள்ள தர்மர் நகர் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள கிணற்றின் அருகில் சென்ற போது ஜான்சன் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார். சுமார் 70 அடி ஆழமுள்ள கிணற்றில் 30 அடிக்கு தண்ணீர் இருந்தது. தண்ணீரில் தத்தளித்தபடி மேலே வர முடியாமல் ஜான்சன் உயிருக்கு போராடியுள்ளார்.
இதனை பார்த்தவர்கள் உடனடியாக சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி ஜான்சனை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.