சென்னை முகப்பேர் மோகன்ராம் நகரை சேர்ந்தவர் முத்துலட்சுமி (வயது 39). இவரிடம், பாக்யராஜ், ஜெயபால், கமல் ஆகியோர் கேரளாவில் வசிக்கும் வர்கீஸ் மற்றும் தங்கம்மாள் ஆகியோருக்கு சொந்தமான நிலத்தை ரூ.31 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்றனர்.
பின்னர் முத்துலட்சுமி விசாரித்தபோது வர்கீஸ் மற்றும் தங்கம்மாள் இருவரும் அமெரிக்காவில் வசிப்பதும், தனக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்த பாக்யராஜ், ஜெயபால், கமல் ஆகியோர் வர்கீஸ், தங்கம்மாள் என்ற பெயரில் வேறு 2 பேரை ஆள்மாறாட்டம் செய்து போலியான ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதுகுறித்து முத்துலட்சுமி அளித்த புகாரின்பேரில் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நில மோசடி வழக்கில் கடந்த 6 வருடங்களாக தலைமறைவாக இருந்த திருவேற்காடு அடுத்த கீழ் அயனம்பாக்கம், பொன்னியம்மன் நகர், காமராஜர் தெருவை சேர்ந்த ஜெயபால் (55) நேற்று கைதானார். அவரை போலீசார் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.