சென்னை,
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் பாதிப்பை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் அனைவருக்கும் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய சர்வதேச விமான நிலையங்களில் பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த நாகர்கோவில் நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா பாதித்துள்ளதா என்பதை அறிய ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் ஓமைக்ரான் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.