கோவை,
ஜம்மு-காஷ்மீரை சேர்ந்தவர் ஜோகிந்தர் குமார் (வயது 42). இவர் கோவையில் உள்ள ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். இவர் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலையொட்டி ஜோகிந்தர் குமார் தனது துப்பாக்கியை போலீசில் ஒப்படைத்தார்.
இந்த நிலையில் டெல்லி செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு கோவை விமான நிலையத்திற்கு வந்தார்.
அப்போது அவரது பைகள் விமான நிலையத்தில் ஸ்கேன் செய்யப்பட்டது. அந்த பைக்குள் துணிக்குள் மறைக்கப்பட்ட நிலையில் 5 துப்பாக்கி தோட்டாக்கள் இருப்பதை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக பீளமேடு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், விமான நிலையத்துக்கு வருவதற்காக அவசரமாக கிளம்பும்போது தனது பையில் தோட்டாக்கள் வைத்திருந்ததை கவனிக்க தவறி விட்டேன் என்று கூறினார். இதைத்தொடர்ந்து அவரது துப்பாக்கி உரிம ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டது. பின்னர் அவரிடம், எழுதி வாங்கிக் கொண்டு போலீசார் அனுப்பி வைத்தனர். ஆனால் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.