சென்னை,
மதுரை மாவட்டத்தை சேர்ந்த 16 பேர் இமாசல பிரதேச மாநிலம் மணாலிக்கு சுற்றுலா சென்றனர். செல்லும் வழியில் கடந்த 14ந்தேதி பிலாஸ்பூர் என்ற இடத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் காயத்ரி, ஜெயராமன், குமார், ஆகியோர் உயிர் இழந்தனர் என்ற செய்தியையும், 13 பேர் காயம் அடைந்துள்ளனர் என்ற செய்தியையும் அறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன். உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
விபத்து பற்றி அறிந்தவுடன் எனது உத்தரவின்பேரில், தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அதிகாரிகளை தொடர்பு கொண்டு, உயிர் இழந்தவர்களின் உடல்களை உடனடியாக மதுரைக்கு கொண்டு வருவதற்குத் தேவையான ஏற்பாடுகளையும், காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி மற்றும் அவர்களை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.
மேலும், உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சமும்; பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும்; லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.