தமிழக செய்திகள்

குமரி கடல் பகுதியில் மீண்டும் ஒரு புயல் உருவாகும் வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்

அரபிக் கடலில் ஏற்கனவே கியார் புயல் உருவான நிலையில் தற்போது குமரி கடல் பகுதியில் மீண்டும் ஒரு புயல் நாளை உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை

அரபிக் கடலில் உருவான கியார் புயல் கடந்த 25-ம் தேதி தீவிர புயலாக மாறி வடமேற்காக ஓமன் நாட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த புயல், வருகின்ற 2-ம் தேதி ஒமனை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தென்கிழக்கு அரபிக்கடலின் கன்னியாகுமரி பகுதி அருகே நாளை ஒரு புதிய புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் கியார் பயணிக்கும் அதே பாதையில் செல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கியார் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதுடன், கர்நாடகம், மராட்டியம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ராயல்சீமா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகியவற்றில் ஒருசில இடங்களில் அதிக மழை பெய்யக்கூடும். காரைக்கால், கேரளா - மகே மற்றும் லட்சத்தீவு; தெற்கு உள்துறை கர்நாடகாவில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் கன மழை பெய்யும்.

இதற்கிடையே, இலங்கை அருகே தென்மேற்கு வங்ககடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று குமரிக் கடல் பகுதிக்கு நகர்ந்து வலுப்பெறும் என்றும் நாளை அல்லது நாளை மறுநாள் தென்கிழக்கு அரபிக் கடல், லட்சத்தீவு பகுதிக்கு நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதனால், நாளை முதல் இரண்டு நாட்களுக்கு கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், வேலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.