காதல் திருமணம்
சென்னையை அடுத்த புழல் கதிர்வேடு பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மனைவி பல்கீஸ். இவர்களுடைய மகள் தமிழ்ச்செல்வி(வயது 19). இவரும், செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகர் 8-வது தெருவைச் சேர்ந்த மதன்(22) என்பவரும் 4 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் முதல் தங்கள் மகள் தமிழ்ச்செல்வியை காணவில்லை என செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் அவரது தாயார் பல்கீஸ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வியின் கணவர் மதனிடம் விசாரணை நடத்தினர்.
கத்திக்குத்து
அப்போது மதன், கடந்த மாதம் 25-ந்தேதி தனது காதல் மனைவி தமிழ்ச்செல்வியுடன் மோட்டார்சைக்கிளில் ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள கோனே அருவிக்கு சுற்றுலா அழைத்துச் சென்றேன்.
அங்கு எங்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான், தமிழ்ச்செல்வியை கத்தியால் குத்தினேன். இதில் படுகாயங்களுடன் தவித்த அவளை அங்கேயே தவிக்கவிட்டு விட்டு வந்து விட்டேன். அதன்பிறகு அவள் என்ன ஆனாள் என்பது எனக்கு தெரியாது என திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.
கதி என்ன?
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், மதனை சித்தூரில் உள்ள அந்த நீர்வீழ்ச்சிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தமிழ்ச்செல்வியை கத்தியால் குத்திய இடத்தை போலீசாரிடம் அவர் காட்டினார். இதையடுத்து போலீசார், அந்த பகுதி முழுவதும் தேடியும் தமிழ்ச்செல்வியை காணவில்லை. அவர் கதி என்ன என்பது தெரியவில்லை.
போலீசார், ஆந்திர மாநில போலீஸ் உதவியுடன் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மதன், தமிழ்ச்செல்வி இருவரும் அருவிக்கு செல்வதும், திரும்பி வரும்போது மதன் மட்டும் தனியாக வருவதும் பதிவாகி இருந்ததாக தெரிகிறது.
தேடுதல் பணி தீவிரம்
தமிழ்ச்செல்வி மாயமாவதற்கு 3 நாட்கள் முன்பு அவரது தாயார் செல்போனில் மகளை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது போனை பறித்து பேசிய மதன், மாமியாரிடம் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. பணம் கேட்டு தமிழ்ச்செல்வியிடம் மதன் தகராறு செய்ததாகவும் தெரிகிறது. மகளை பற்றி கேட்ட போதெல்லாம் முன்னுக்குபின் முரணாக மதன் பேசினார். எனவே தனது மகளை மதன் கொலை செய்து இருக்கலாம் என அவரது பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்தனர்.
ஆனால் தமிழ்ச்செல்வியை மதன் கத்தியால் குத்தியதாக கூறி ஒரு மாதம் ஆகிவிட்டது. மலைப்பகுதியில் படுகாயங்களுடன் போராடிய தமிழ்ச்செல்வி என்ன ஆனார்?. எங்கு இருக்கிறார்? என்பது தெரியவில்லை. கத்திக்குத்து காயங்களுடன் போராடிய தமிழ்ச்செல்வி அருகில் உள்ள ஆழமான புதர் மண்டிய பகுதியில் தவறி விழுந்து இருக்கலாமா? என்ற கோணத்தில் ஆந்திர மாநில போலீசாருடன், செங்குன்றம் போலீசாரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
பெற்றோர் தவிப்பு
மகள் மாயமாகி ஒரு மாதம் ஆகியும் அவள் உயிருடன் இருக்கிறாளா? என்ன ஆனாள்? என்பது தெரியாமல் தமிழ்ச்செல்வியின் பெற்றோர் தவித்து வருகிறார்கள்.
ஒரு மாதம் ஆகியும் தங்கள் மகள் பற்றி எந்த தகவலும் இல்லாததால் தமிழ்ச்செல்வியின் பெற்றோர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து உள்ளனர். இதையடுத்து இந்த வழக்கின் வேகத்தை செங்குன்றம் போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
மேலும் இது தொடர்பாக தமிழ்ச்செல்வியின் கணவர் மதன் மற்றும் அவரது நண்பர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். காதல் திருமணம் செய்த 4 மாதங்களில் புதுப்பெண் திடீரென மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.