தமிழக செய்திகள்

கேக் தயாரிக்கும் எந்திரத்தில் பிணமாக கிடந்த வாலிபர்

வள்ளியூரில் கேக் தயாரிக்கும் எந்திரத்தில் வாலிபர் பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வள்ளியூர் (தெற்கு):

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கன்ஸ்ட்ரக்சன் தொழில் செய்து வருகிறார். மேலும் வள்ளியூர்-ராதாபுரம் மெயின் ரோட்டில் பேக்கரியும் நடத்தி வருகிறார். இவரிடம் கீழக்கட்டளையைச் சேர்ந்த முத்து செல்வன் (வயது 26) என்பவர் கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவர் தினமும் இரவில் பேக்கரியில் உள்ள குடோனில் தங்குவது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவில் முத்து செல்வன் குடோனில் தூங்கச் சன்றார். நேற்று காலையில் அவருடன் வேலை பார்ப்பவர்கள் குடோனுக்கு சென்றனர். ஆனால் அவரை காணவில்லை. இறுதியில் பேக்கரியில் கேக் தயாரிக்கும் பெரிய எந்திரத்தை திறந்து பார்த்தனர். அதில் முத்து செல்வன் பிணமாக கிடந்தார். இதை பாத்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக வள்ளியூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முத்து செல்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முத்து செல்வன் தானாகவே கேக் எந்திரத்திற்குள் சென்று தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே சாவுக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். வள்ளியூரில் கேக் தயாரிக்கும் எந்திரத்தில் வாலிபர் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.